1. செய்திகள்

மேகதாதுவில் அணையா? கொஞ்சம் பொறுசாமி.. துரைமுருகன் அறிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
mekedatu dam issue- Duraimurugan reply to karnataka sivakumar

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த கர்நாடக தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்ற நிலையில் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு அமைச்சரவையில் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. அணை கட்டுவதற்கான பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இச்செய்தி தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் அனைத்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுக்குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-

”கர்நாடகாவில் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற திரு.சிவக்குமார் அவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் அவர்கள் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். அமைச்சர் சிவக்குமார் அவர்கள் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்’’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியும், கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போதும் மேகதாது பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமார் அதிரடியான நடவடிக்கைகள் பெயர் பெற்றவர் என்பதால் இப்பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை உண்டாக்காமல் இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது என சமூக நல ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் காண்க:

மண் வள அட்டை- விவசாயிகள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

English Summary: mekedatu dam issue- Duraimurugan reply to karnataka sivakumar Published on: 31 May 2023, 07:13 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.