ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் “கிசான் மேளா” இன்று முதல் புவனேஸ்வரில் தொடங்க உள்ளது. இதற்காக நேற்று க்ரிஷி ஜாக்ரன் குழுவினர் OUAT துணைவேந்தர் பிரவத் குமார் ராலை சந்தித்து நிகழ்வு குறித்து கலந்தாலோசித்தனர்.
ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT) இந்தியாவின் பழமையான வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக OUAT பல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன. இந்த முறை, OUAT சார்பில் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 27-28) புவனேஸ்வரில் “கிசான் மேளா” நடத்த திட்டமிட்டுள்ளது.
OUAT பல்கலைக்கழகம் 48 அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் 8 மண்டல ஆராய்ச்சி நிலையங்கள், 4 மண்டல துணை நிலையங்கள், 7 உற்பத்தி பொருட்கள் குறித்த ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 தகவமைப்பு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவி விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு தன் பங்கினை ஆற்றி வருகிறது. விவசாயத் துறையில் விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆராய்ச்சி நிலையங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள 31 KVK-களின் நெட்வொர்க் மூலம் விவசாய சமூகத்திற்கு தொழில்நுட்பங்களை செம்மைப்படுத்தி அது குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் தனி இயக்குநரகத்தை பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
இதனிடையே நேற்று க்ரிஷி ஜாக்ரனின் தலைவரும், அதன் நிர்வாக ஆசிரியருமான எம்.சி.டொமினிக் மற்றும் அவரது குழுவினர், OUAT -பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு பல்கலைக்கழக துணைவேந்தரான பிரவத் குமார் ரோலைச் நேரில் சந்தித்து நிகழ்வின் ஏற்பாடு மற்றும் தயாரிப்புகள் குறித்து கலந்தலோசித்தனர். பிரவத் குமார் ரால் கடந்த 29 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் விவசாயத்துறையில் தனது சிறந்த பங்களிப்பினையும் வழங்கி வருகிறார்.
நடைபெற உள்ள விவசாய கண்காட்சியின் முக்கிய நோக்கம், விவசாயத்துறையில் மிக சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விவசாய நடைமுறைகளை எளிதாக்குவதுடன், பல்வேறு வேளாண் தொடக்கங்கள், கூட்டுறவுகள் மற்றும் FPO- களினை ஒருங்கிணைத்து அவர்களின் வணிகத்தையும் விரிவுபடுத்தவும் ஏதுவாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
நிகழ்வில் விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், FPOக்கள், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறை வல்லுனர்கள், ICAR நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் விதை முகவர்கள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கிசான் மேளாவில் ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்காக 11 மத்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அப்படி போடு..புவிசார் குறியீடு பெற்ற இலவம்பாடி கத்தரி,ராம்நாடு முண்டு மிளாகாய்
ஜல்தபாரா தேசிய பூங்காவில் வாகனத்தை முட்டி மோதிய காண்டாமிருகம்- 7 பேர் படுகாயம்