ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT) சார்பில் ஏற்பாடு செய்துள்ள “கிசான் மேளா”-வின் முதல் நாள் நிகழ்வு இன்று புவனேஸ்வரில் தொடங்கியது.
இந்தியாவின் பழமையான இரண்டாவது வேளாண் பல்கலைக்கழகமானது ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT). விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக OUAT பல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன. இந்த முறை, OUAT சார்பில் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 27-28) புவனேஸ்வரில் “கிசான் மேளா” நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி உழவர் கண்காட்சியின் முதல் நாள் தொடக்க அமர்வு புவனேஷ்வரில் இன்று தொடங்கியது.
OUAT பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வித்துறை தலைவர் பி.ஜே.மிஸ்ரா வரவேற்புரை ஆற்ற, க்ரிஷி ஜாக்ரான் ஊடக தலைமை மற்றும் நிறுவனர் எம்.சி.டொமினிக்கின் “ விவசாயத்தை மேம்படுத்துதல்” தொடர்பான உரையுடன் நிகழ்வு தொடங்கியது.
கூட்டத்தில் உரையாற்றிய எம்.சி.டொமினிக், "இந்திய மக்களில் பெரும் பகுதியினர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நிலையில், நமது நாட்டில் வலுவான வேளாண் சார்ந்த ஊடகங்கள் இல்லை, இதன் காரணமாக நமது பல பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இது தான் க்ரிஷி ஜாக்ரனைத் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாகும், மேலும் பல மொழிகளில் செயல்படும் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் செய்தி ஊடகமாக நாங்கள் இப்போது இருக்கிறோம்” என்றார்.
விவசாயிகளை நாம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி அவர் பேசுகையில், “நான் இளமையாக இருந்தபோது, என் தந்தை என்னை பால் வாங்க ஒரு குறிப்பிட்ட பால்காரரிடம் அனுப்புவார், ஏனெனில் அந்த விவசாயி எங்களுக்கு நம்பகமான பிராண்டாக இருந்தார். இந்த யோசனையை எங்களது ”பார்மர் தி பிராண்ட்” முன்முயற்சியில் இணைத்துள்ளோம், அங்கு விவசாயிகளுக்கு அவர்களின் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் மூலம் அவர்களின் சொந்த பிராண்டாக மாறுவதற்கும் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.
விதைகள், நாற்றுகள், கியூபிஎம் (QPM), திசு வளர்ப்பு தாவரங்கள், காளான் ஸ்பான், கால்நடை வளர்ப்பு, உயிரி உரங்கள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் மண்புழு உரம் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கான தொழில்நுட்ப அமர்வுகள் நடைப்பெற்றன.
இரண்டாம் நாளான, நாளை(பிப்.,28 ஆம் தேதி) விவசாயிகள்- வேளாண் விஞ்ஞானிகளுக்கு இடையேயான கலந்தாலோசனை கூட்டமும், வேளாண் இடைத்தரகர்கள்- தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான அறிமுகக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய கண்காட்சியின் முக்கிய நோக்கம், விவசாயத்துறையில் மிக சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விவசாய நடைமுறைகளை எளிதாக்குவதுடன், பல்வேறு வேளாண் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மற்றும் FPO- களினை ஒருங்கிணைத்து அவர்களின் வணிகத்தையும் விரிவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், FPOக்கள், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறை வல்லுனர்கள், ICAR நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் விதை முகவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 48 அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் 8 மண்டல ஆராய்ச்சி நிலையங்கள், 4 மண்டல துணை நிலையங்கள், 7 உற்பத்தி பொருட்கள் குறித்த ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 தகவமைப்பு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவி விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு தன் பங்கினை ஆற்றி வருகிறது. விவசாயத் துறையில் விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆராய்ச்சி நிலையங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள 31 KVK-களின் நெட்வொர்க் மூலம் விவசாய சமூகத்திற்கு தொழில்நுட்பங்களை செம்மைப்படுத்தி அது குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் தனி இயக்குநரகத்தை பல்கலைக்கழகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
தாட்கோ மூலம் அழகு சாதனத்துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி- யாரெல்லாம் தகுதி?
ஈரோடு இடைத்தேர்தல்: என்னங்க பித்தலாட்டம், விரல் மை அழியுது- குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அலுவலர்