விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் பூரிகுடிசை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பனையேறிகளின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 13 ஆம் தேதி மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கள் இறக்குவதற்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் பனைத்தொழிலில் ஈடுப்பட்டு வந்த தொழிலாளர்களை கள்ளச்சாராய வழக்கில் போலீசார் போலியாக கைது செய்துள்ளதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து பூரிகுடிசையில் பனையேறிகள் ஒருங்கிணைந்து, பனைவெல்லம் உற்பத்தியாளர் தொழிற் கூட்டுறவு சங்க கொட்டகை வளாகத்தில் கடந்த 27 ஆம் தேதி காலை 11:00 மணி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
பனையேறிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் விவரம்:
* தமிழ்நாட்டில் உடனடியாக கள் தடையை நீக்கி, கள்ளை இறக்கவும் பருகவும் விற்கவும் பனையேறிகளுக்கு உள்ள உரிமையை உறுதி படுத்திட வேண்டும்.
*சாராயப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பனையேறிகளை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.
* பனையேறிகள் மீது சாராய பொய் வழக்கு புனைந்த காவல்துறை அலுவலர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
* பூரிகுடிசை கிராம பெண்களை தகாத வார்த்தைகளை பேசி இழிவு படுத்திய கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
முன்னதாக தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், வி.ஏ.ஓ வாசு ஆகியோர் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டமானது தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. இந்த அறவழி போராட்டத்திற்கு பனையேறிகள், பனை செயல்பாட்டாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொது மக்கள் என அனைவரும் வருகை தந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
பனைத்தொழில் சார்ந்து இயங்கும் நுகர்வோர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதால் உண்ணாவிரத போராட்டம் வீரியம் அடைந்துள்ளது. தமிழக அரசும், அரசு உயர் அதிகாரிகளும் பனையேறிகளின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
pic courtesy: பாண்டியன் பனையேறி (FB)
மேலும் காண்க: