பால்மரோசா விவசாயிகள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுப்பவர்கள் தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை காரணமாக உற்பத்தி குறையும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தர்மபுரி விவசாயிகள்.
பால்மரோசா தர்மபுரியில் உள்ள மிக முக்கியமான குடிசைத் தொழில்களில் ஒன்றாகும். 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எண்ணெய் எடுப்பதில் ஈடுபட்டுள்ளனர், இது வாசனை திரவியங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் அதிக தேவை உள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுப்பவர்கள் சந்தைப்படுத்தல் வழிமுறைகள் இத்தொழிலில் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர்.
இடைத்தரகர்களால் லாபம் இல்லை:
பால்மரோசா எனப்படும் தைலப்புல் பயிரிட்டு எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் உங்கரனஹள்ளி ஊராட்சியைச் சேர்ந்த எம்.சின்னசாமி முன்னணி நாளிதழ் ஒன்றிடம் பேசுகையில், “நாங்கள் பெரும்பாலும் தூபம் தயாரிக்க அல்லது வாசனை திரவியம் தயாரிக்க ஏற்ற வகை பால்மரோசாவைத்தான் உற்பத்தி செய்கிறோம். இந்தியாவில், பெரும்பாலான வாசனை திரவிய சந்தைகள் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளன. அவர்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்வது எங்களுக்கு சாத்தியமில்லை. இதனால் தருமபுரி மார்க்கெட்டை இடைத்தரகர்கள் கையகப்படுத்தி பெருமளவில் லாபம் பார்க்கிறார்கள்” என்றார்.
“பொதுவாக, இடைத்தரகர்கள் எங்களிடமிருந்து ஒரு லிட்டர் பால்மரோசா எண்ணெயை ரூ. 2,000-க்கு வாங்குகிறார்கள், உண்மையில் சந்தை விலை லிட்டருக்கு ரூ.3,000 முதல் ரூ.3,500. மேலும், அதிகரித்து வரும் கூலி உயர்வால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மற்றொரு எண்ணெய் பிரித்தெடுப்பாளரான என் ஆனந்தன் கூறுகையில், “பால்மரோசா இலை சுற்றுச்சூழலுக்கு உகந்த தாவரமாகும், இது சுற்றுச்சூழலில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது".
"தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த இலைகளை மாநிலம் முழுவதும் அதிகளவில் பயிரிடுவதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளை ஊக்குவிப்பதும், சந்தைப்படுத்தல் வழிகளை மேம்படுத்துவதும் விவசாயிகள், எண்ணெய் பிரித்தெடுப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்” என்றார்.
இதுகுறித்து வேளாண் சந்தைப்படுத்தல் துறை இணை இயக்குனர் மற்றும் வேளாண் வணிக டாக்டர் பாலசுப்ரமணி கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்வோம். முடிந்தால் உழவர் உற்பத்தியாளர் அமைப்பை இப்பகுதியில் உருவாக்க நடவடிக்கை எடுப்போம் மேலும், இ-நாம் மூலம் சாத்தியமான சந்தைகளை எளிதாகக் கண்டறிந்து, விவசாயிகள் நியாயமான விலையை பெற உறுதிசெய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
தைலப்புல்லை விதைக்க ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வரை விதை தேவைப்படுகிறது. ஒருமுறை விதைத்துவிட்டால் ஆறு முதல் பத்து ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. மானாவாரி நிலத்தில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: