மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நடப்பாண்டு விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பம் தேர்வுக்குழுவால் வரவேற்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் விருதுகள் வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இவ்வருடமும் கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2023 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன. விருதின் வகை, பரிசுத்தொகை தகவல்கள் பின்வருமாறு-
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது - 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம். ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.)
- மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கான விருது- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கான விருது- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கான விருது- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 26.06.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும், இணையதளம் வாயிலாக “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
90 ஆண்டுக்கால வரலாற்றில் 19-வது முறையாக மேட்டூர் அணை திறப்பு!