வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அதனை ஒட்டிய தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்தமிழகத்தில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடல்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 5 செ.மீ, வால்பாறை (கோவை), கீழ் கோதையார் (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா, ஓடிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக
- ஜூன் 11 மற்றும் ஜூன் 12 தேதி மன்னர் வளைகுடா, வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதி, தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசும்
- ஜூலை 11 முதல் ஜூன் 15 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வீசும்
- அதேபோல் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கொங்கன் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்
- இந்த நேரத்தில் கடல் அலை 3.5 முதில் 3.8 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தணுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பகூடும் இதனால் மீடவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மழை
இதனிடையே இன்று காலை சென்னை மற்றும் இதன் புறநகர்ப்பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. சென்னை தரமணி, மயிலாப்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மேலும் படிக்க...
அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?
மதுரையில் நெல், பயறு சாகுபடியை அதிகரிக்க திட்டம் - வேளாண்துறை!
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்...இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு!