தென்மேற்கு பருவமழை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்திருப்பதால், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழைக் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளம்
நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கூடலூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அப்பகுதியில் வசித்துவந்த 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிக கன மழை எச்சரிக்கை (Heavy heavy rain)
அடுத்த 24 மணிநேரத்திற்கு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது..
இதேபோல், தமிழக கடேலார மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இலேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை பொழிவு (District Rainfall)
அதிகபட்சமாக நீலகிரியின் தேவலாவில் 38 சென்டிமீட்டரும், அவலாஞ்சி, கூடலூர் பஜாரில் தலா 35 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)
குமரிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை கேரளா- கர்நாடகா கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு, மத்தியக் கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடல் அலை அறிவிப்பு
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி வரை, கடல் அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!