சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்யின் அடிப்படை இறக்குமதி வரியினை 5% குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இதன் மூலம் சமையல் எண்ணெய்க்கான விலை சந்தையில் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர்களுக்கு சமையல் எண்ணெய் குறைவான விலையில் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், சமையல் எண்ணெய்களின் அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு குறைக்க முன்வந்துள்ளது. அதன்படி, உணவு மற்றும் பொது விநியோகத்துறை 2023, ஜூன் 14 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி வரி 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் (ஜூன் 14) அமலுக்கு வந்த இந்த வரி குறைப்பு- 2024, மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவினால் உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு நுகர்வோர்களுக்கு பயனளித்து, உள்நாட்டு சந்தையில் சில்லரை விலை குறைய உதவும்.
கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சர்வதேச அளவில் விலை மிகவும் அதிகரித்த போது, உள்நாட்டு சந்தை விலையிலும் அது பிரதிபலிக்கிறது. நுகர்வோர்களுக்கு தேவையான அளவு கிடைக்கும் வகையில், நாட்டில் சமையல் எண்ணெய் விலைகளை உணவு மற்றும் பொது விநியோகத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போல் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பினை இருப்பு வைப்பதிலும் கட்டுப்பாடு விதித்துள்ளது ஒன்றிய அரசு. அவற்றின் விவரம் பின்வருமாறு-
துவரம் மற்றும் உளுத்தம் பருப்பின் விலை அதிகரித்து வரும் நிலையில், வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பருப்பினை அதிகப்பட்சம் எவ்வளவு இருப்பு வைக்கலாம் என்பதனை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் இருப்பு நிலையையும் மாநில அரசுகளால் இருப்பு வரம்புகள் அமலாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (14.06.2023) நடைபெற்றது.
இதன்படி, 2023 அக்டோபர் 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இவர்கள் தங்களின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்ற இணையப் பக்கத்தில் அறிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் பருப்பின் இருப்பு உறுதி செய்யப்படும் எனவும் அவற்றின் விலை கட்டுக்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic courtesy: Dhaka Tribune
மேலும் காண்க:
PM Kisan: இன்றே கடைசி.. 14 வது தவணைக்கு உடனே இதை செய்யுங்கள்