
good news for virudhunagar dist farmers-Apply for fodder cultivation
கால்நடை பராமரிப்புத்துறை - ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 இலட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
90 ஏக்கர் இலக்கு:
ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24 கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏக்கருக்கு 3000 ரூபாய்:
கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000-/ மற்றும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500/- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், இத்திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30% க்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20- ஆம் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு
Share your comments