சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24- ஆம் ஆண்டிற்கு 21,022 ஹெக்டர் நெல் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., தலைமையில் நேற்று (25.07.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். ஜூலை மாதம் முடிய பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 348.3 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 24.07.2023 வரை 318 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24- ஆம் ஆண்டிற்கு நெல்- 21,022 ஹெக்டர் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,01,140 ஹெக்டர் பரப்பிற்கு சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயறு வகைகளுக்கு 56,900 ஹெக்டரும், உணவு தானியங்களுக்கு 1,79,062 ஹெக்டரும், எண்ணெய் வித்துக்களுக்கு 34,410 ஹெக்டரும் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய 44,296.9 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பு 2023-24-ஆம் ஆண்டில் நெல் 148 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 114.9 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 309 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 284 மெட்ரிக் டன்னும், பருத்தி 3 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களான யூரியா 22,246 மெட்ரிக் டன்னும், டிஏபி 14,896 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 12,355 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,650 டன்னும் என மொத்தம் 68,147 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா 5,091 மெட்ரிக் டன்னும், டிஏபி 5,848 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,305 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15,528 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 28,772 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் உழவனின் நவீன நண்பன் “உழவன் செயலி” மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் ச.சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.மாலினி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மேலும் காண்க:
மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு