தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கருப்பட்டியில் இரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இதனால், கருப்பட்டியின் உண்மைத்தன்மை மாறி விடுகிறது. ஆதலால், கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பனைவெல்லத்தில் இரசாயனம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், தமிழக அரசின் மரம் பனைமரம் (Palm tree). இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல்வேறு பயன்களை தருகின்றன. அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. பனங்கூழ், பனம்பழம், பனை வெல்லம், பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் பலப்பல மருத்துவ குணங்கள் (Medical Benefits) உள்ளன. உடன்குடி, வேம்பார் பகுதிகளில் பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை. ஆனால் பனைவெல்லம், கருப்பட்டி ஆகியவை தயாரிக்கும்போது, சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றுடன் சில ரசாயனங்களை சேர்க்கின்றனர்.
இதனால் பனை வெல்லம் (Palm Jaggery), கருப்பட்டியை பயன்படுத்துபவர்களுக்கு உடல் உபாதைகளும், பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. மேலும் பனை பொருட்கள் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். கலப்பட பனைவெல்லம், கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
சிறப்பு குழு
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கருப்பட்டியில் கலப்படத்தை தடுப்பதற்கு சிறப்பு குழுவை (Special Team) உணவு பாதுகாப்புத்துறை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழு மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும் படிக்க
தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் ஐவர்!
பருத்தியில் மர்ம நோய் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!