வட மாநிலங்களில் வெங்காய சாகுபடி அதிகரிப்பு, மத்திய அரசின் சார்பில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை, ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த வெங்காயம் என ஏகப்பட்ட பிரச்சினைகளால், தற்போது வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் சந்தையில் போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர்-கோவை வட்டாரங்களில் சுமார் 7,500 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். சென்னையில் காய்கறிகளின் மொத்த விற்பனை மையமான கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ₹18 முதல் ₹25 வரை மட்டுமே விற்பனையாகிறது.
மத்திய அரசு சார்பில் வெங்காயத்தின் விலை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடும், 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய வரத்து அதிகமாக உள்ளதாலும் விலை சரிவடைந்துள்ளதாக கோவை வட்டார மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விவசாயி ஒருவர் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் வெங்காய கொள்முதல் விலை குறித்து தெரிவிக்கையில், ”கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து வெங்காய விலை கிலோ ₹30 என்கிற அளவில் தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த விலையானது, உற்பத்தி செலவுக்கு கூட போதாது. கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், நரசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் என்ன செய்வது என்று வழித்தெரியாமல் விழிப்பிதுங்கி போயுள்ளனர்” என்றார்.
” வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், கடந்த பருவ சாகுபடியில் அறுவடை செய்து கையிருப்பு வைத்துள்ள வெங்காயத்தையும் என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளோம்."
சின்ன வெங்காயம் 70% வரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் வெங்காய விவசாயிகளான நாங்களும் நீண்ட காலமாக தனி ஏற்றுமதி குறியீட்டை அரசிடம் கேட்டு வருகிறோம். அதற்கு அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”.
Read more: புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைப்பு- மாநிலம் வாரியாக விலை நிலவரம்!
”சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். வெங்காய ஏற்றுமதிக்கு, இத்தகைய நாடுகள் முக்கியச் சந்தையாகவும் திகழ்கிறது. பெரும்பாலான வெங்காய விவசாயிகள் கடன் வலையில் சிக்கி, அடுத்த பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். விநியோக தேவை காரணமாக, வெங்காயத்தின் விலை ஏப்ரல்-மே மாதங்களில் அதிகரிக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அதுவரை என்ன செய்வது?” என்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் ஊக்குவிக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக, வெங்காயத்தை இரண்டு மாதங்களுக்கு இருப்பு வைக்கலாம், அதன் பிறகு ஈரப்பதம் மற்றும் தரம் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படும் நிலையில், அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!