திருச்சி மாநகராட்சி ஜூன் 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பூரண தடையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. வணிகர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக, மே 31 க்கு முன் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் காகிதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு திருச்சி குடிமையியல் அமைப்பு கேட்டுக் கொண்டது.
பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலும் அதன் குறைவான எடை, எடுத்துச் செல்ல எளிமையாக இருப்பதால அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால அதன் பயன்பாடு என்பது மிக ஆபத்தான ஒன்றாக உள்ளது. குறிப்பாக நீர், நிலம் ஆகியவற்றை இது பெரிதாகப் பாதிக்கிறது. அதாவது, இவை எடை குறைவாக இருப்பதால் விரைவாகக் காற்று, நீர் ஆகியவற்றால் அடித்துச் செல்லப்படுகின்றன. எனவே, இது அனைத்து இடங்களுக்கும் எளிதில் சென்று விடும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இது நிலத்தில் படிந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. இது மக்கும் தன்மை இல்லாது இருப்பதால் நிலத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. ஆக, பிளாஸ்டிக் பைகளால் மண்ணுக்குக் கெடுதல் விளைகிறது. இதன் பயன்பாட்டைத் தவிர்த்தால் மிகுந்த நன்மை பெறலாம் என்ற நோக்கில் இந்த பிளாஸ்டிக் பை உபயோகிக்கத் தடை என்பது பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சிலும் ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ஜூன் 1 முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். யாரேனும் மீறி விற்பனை செய்வதோ, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைக் கொடுப்பதோ கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு, பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்தால் அபராதம் விதித்தும், பொருட்களைப் பறிமுதல் செய்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தனது அதிகாரப் பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்றும் வகையில் துணிப்பைகள் (மாஞ்சா பை) மற்றும் காகித அட்டைகளைப் பயன்படுத்துமாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி மே 18ஆம் தேதி திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் வணிகர் சங்க நிர்வாகிகள், உணவக உரிமையாளர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட வணிகர்களைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் படிக்க
தமிழகத்தில் இனி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை!
இனி வீட்டிலிருந்தபடியே மின் கட்டணம் செலுத்தலாம்! விவரம் உள்ளே!