மாநிலத்தில் நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், மாநிலத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை உருவாக்க, நேற்று மார்ச் ஒன்றாம் தேதி ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது, ஐக்கிய நாடுகள் அமைப்பில் சுற்றுச்சூழல் துறையில் முன்னணி அமைப்பாகும். உயிர்ப்பன்மை உள்ளிட்ட இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவை இத்திட்டத்தின் உலகளாவிய நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமானது, டென்மார்க் நாட்டின் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, இந்திய மாநகரங்கள் நிலையான குளிர்ச்சி மற்றும் வெப்பத்தைத் தாங்கும் உத்திகளை மேற்கொள்ள தேசிய நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. குளிர் கூட்டமைப்பு மற்றும் டென்மார்க் பசுமை வியூக கூட்டாண்மை கட்டமைப்பின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, நகரங்களில் வேகமாக அதிகரித்து வரும் குளிரூட்டுதலுக்கான தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை அளிக்கிறது. அதே நேரத்தில், அதிகரித்து வரும் தீவிர வெப்பத்தை தணிப்பதற்கான முன்முயற்சிகளிலும் ஒத்துழைப்பளிக்கும். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேம்பட்ட நகர்ப்புற வடிவமைப்புகள், நகரங்களின் பசுமை போர்வையை மேம்படுத்துதல், வலுவான செயல்திறன் நடவடிக்கைகள், தீவிர வெப்ப திட்டமிடல் மற்றும் தனித்துவமான குளிரூட்டல் உள்ளிட்டவற்றிற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டங்களைத் தயாரிக்கும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்வருவனவற்றிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்:-
1) தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான பங்களிப்பாளர்களுக்கு நிலையான குளிரூட்டுதல் மற்றும் தீவிர வெப்பம் குறித்த தொழில்நுட்பம், நிதி, கொள்கை மற்றும் நிறுவனத் தீர்வுகள் தொடர்பான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
2) தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் படிப்பினைகள் குறித்து இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பயிற்சி வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையே இதுபோன்ற துறைகளில் அறிவை பகிர்ந்துகொள்வது மேம்படுத்தப்படும்.
3) அறிவியல் ரீதியான மதிப்பீடுகள் மற்றும் முடிவு ஆதரவு அமைப்புகள் மூலம் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு செயல்படுத்துதல், கட்டமைப்புகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையினை அமல்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் மாநில அளவிலான மற்றும் நகரங்கள் அளவிலான ஒருங்கிணைந்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
4) அறிவியல் மதிப்பீடுகள், செலவு-செயல்திறன் பகுப்பாய்வு, செயல்படுத்துதல் கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம், ஒருங்கிணைந்த மாநில மற்றும் நகரங்கள் அளவிலான காற்றின் தர மேலாண்மை முடிவு ஆதரவு அமைப்புகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் உதவுதல்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்கான பல முன்னோடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இம்மாநிலத்தில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இவ்வரசின் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை இந்நிறுவனம் வழிநடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அமைத்துள்ளது. இந்த நிதியானது தேவைப்படின் மற்றொரு 1000 கோடி ரூபாய்க்கு விரிவாக்கும் வாய்ப்புடன் நிர்வகிக்கப்படும்.
இக்காலநிலை மாற்ற நிதி பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன், மிகப்பெரிய பசுமைத் திட்டங்களுக்கு உதவும் வகையிலான ஒரு துவக்கமாகும். தமிழ்நாடு அரசு, காலநிலைத் திறன்மிகு கிராமங்கள், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், கடற்கரை பகுதிகளில் உயிர்ச்சூழல் வேலி அமைத்தல் போன்ற இன்னபிற திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கங்களை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஏற்படுத்தி, அந்தந்த மாவட்ட வன அலுவலர்களை காலநிலை அலுவலர்களாகவும் நியமித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இவ்விழாவில் டென்மார்க் நாட்டின் அரசு மேன்மை பொருந்திய பட்டத்து இளவரசர் ஃப்ரெட்ரிக் மற்றும் பட்டத்து இளவரசி மேரி ஆகியோர் முன்னிலையில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத் தலைவர் திரு. அதுல் பாகாய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் திருமதி.சுப்ரியா ஸாஹூ,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை ஆகியோருக்கிடையே இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் படிக்க :
கடந்த 122 வருஷத்துல இப்போ தான் அதிக வெப்பம்- எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்