நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க்கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை இன்று தொடங்கியது. இவற்றை சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கே. பொன்னுசாமி தொடக்கி வைத்தார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மலர் கண்காட்சியில் 75 ஆயிரம் மலர்களைக் கொண்டு மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சி, வில் அம்பு, தேனீ முதலான உருவங்கள் பூக்களாலேயே வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், படகு குழாமில் மூன்று புதிய படகுப் போக்குவரத்தும் தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்த நிலையில். பல்வேறு பணிகளின் காரணமாக வருகைதர இயலவில்லை எனக் கூறப்படுகிறது.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் சுற்றுலாத் துறை, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கொல்லிமலை பகுதி அரசு பள்ளிகளின் மாணவ மாணவிகள் அறங்கேற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.
விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை மாலை 3 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள், வழங்குதல், விழாவில் பங்கேற்றுக் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்புடன் நடத்தியவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல், விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் படிக்க