மறந்து போன பரம்பரிய அரிசி ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து மனமகிழ்வுடன் லாபம் பார்த்து வருகிறார் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி சிவக்குமார் அவர்கள்!
உங்கள் கிருஷி ஜாக்ரம் facebook பக்கத்தில் ஞாயிற்று கிழமைகள் தோறும் "Farmer the Brand" நிகழ்ச்சி நடபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் மதிப்புகூட்டு பொருட்களின் தரம் மற்றும் மக்களில் நம்பகத்தன்மை குறித்து விளக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவணுர் பகுதியில் வசிக்கும் விவசாயி சிவக்குமார், உழவாலயம் அமைப்பு மூலம் உற்பத்தி செய்து வரும் தனது பாரம்பரிய அரிசி ரகங்கள் குறித்த அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம்
நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், தனது முன்னோர்கள் காலம் முதல் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ராசாயன உரங்களை பயன்படுத்தியே தனது தந்தை மறைவு வரை அரிசி ரகங்களை தாம் உற்பத்தி செய்து வந்ததாக குறிப்பிடுகிறார். பின்னர், நோய்தாக்குதல், ஆள்பற்றக்குறை, அதிக செலவு, ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் செலுத்தியாக கூறினார்.
பல்வேறு நபர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், தற்போது தனது 11 ஏக்கரில் 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் அரிசி ரகங்களை உற்பத்தி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
இயற்கை விவசாயத்தை மேற்கொண்டபோது, ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் பின்னர் நல்ல பலன் கிடைத்து வருவதாகக்கூறும் சிவக்குமார், தனது உழவாலயத்தின் அமைப்பு மூலம் நல்ல முறையில் வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.
இயற்கை முறையில் பாரம்பரிய அரிசி ரகங்கள் உற்பத்தி
பஞ்சகவ்யம், மீன் கரைசல், ஜீவாமிர்தம், முளை கட்டிய தானியக் கரைசல், சோற்றுக்கற்றாழை & பிரண்டை ஜூஸ், வெற்றிலை & கிராம்பு ஜூஸ், மற்றும் பல வித இலைகளை தண்ணீரில் போட்டு நொதிக்க வைத்து தெளித்தல், புண்ணாக்கு கலவை, உள்ளிட்டவை பயன்படுத்தி தற்போது நல்ல முறையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் பயிர்களில் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் காணப்படுவது இல்லை என்றும் தெரிவிக்கிறார். தனது மீதமுள்ள நிலங்களையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.
அரிசி ரகங்கள் மற்றும் விலை
தனது உழவாலயத்தின் மூலம் பாரம்பரிய அரிசி ரகங்களான வெள்ளைப் பொன்னி, கிச்சலி சம்பா ஒரு கிலோ ரூ.70க்கும், கருங்குவை கிலோ 100 ரூபாய்க்கும், சீரக சம்பா கிலோ ரூ.95க்கும், கருப்புக் கவணி கிலோ150க்கும், A S D.16 கிலோ ரூபாய் 50க்கும், அறுபதாம் குருவை கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
இது தவிர பச்சரி, புழுங்கலரிசி, கை குத்தல் அரிசி, உப்புமா மாவு, இடியாப்ப மாவு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
விவசாயி வியாபாரியாக முயற்சி செய்தால் விவசாயத்தில் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்று குறிப்பிடும் சிவக்குமார். மக்களிடம் பாரம்பரிய அரிசி ரகங்கள் மற்றும் கைக்குத்தல் அரிசியால் கிடைக்கும் சத்துக்கள் குறித்து அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும். இதனால் தனது உற்பத்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தனது இயற்கை வேளாண்மையை குடும்பத்தினரும் ஊக்குவிப்புடன் நல்ல முறையில் செய்து வருவதாகவும், குடும்பத்தினரின் ஆதரவு மூலம் தாம் இந்த இயற்கை விவசாயத்தை முழு பங்களிப்புடன் செய்து வருவதாக பூரிப்புடன் தனது உரையை முடிக்கிறார் சிவக்குமார்.
மேலும் விவரங்களுக்கு : 99940 10945
மேலும் படிக்க....
இயற்கை முறையில் நெல் உற்பத்தி! சாதனை படைத்த இயற்கை விவசாயி செல்வம்!
விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!