1. வெற்றிக் கதைகள்

இயற்கை முறையில் நெல் உற்பத்தி! சாதனை படைத்த இயற்கை விவசாயி செல்வம்!

KJ Staff
KJ Staff
Selvam

விவசாயத்தில் இரசாயன உரங்கள் பெருகி விட்ட நிலையில், இன்றும் இயற்கை முறையைப் பின்பற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. அவ்வகையில், கடலூரைச் சேர்ந்த செல்வம் (Selvam) இயற்கை முறையில் கிட்டத்தட்ட 15 ரகங்களில் நெல் பயிரை விவசாயம் செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி செல்வம், கிருஷி ஜாக்ரன் நடத்தும் ''Farmer the Brand'' நிகழ்ச்சி மூலம், தனது இயற்கை நெல் சாகுபடி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். விடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள்!

செல்வம் இயற்கை அங்காடி:

கடந்த பத்து ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் செல்வம், சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, காட்டு யானம், வைகறைச் சம்பா, தங்க சம்பா, கருப்பு கவுணி, கருடன் சம்பா உள்ளிட்ட 15 ரக நெற்பயிர்களை (Paddy Crop) பயிரிட்டு வருகிறார். இவரின் செல்வம் இயற்கை அங்காடியில், பாரம்பரிய அரிசி இரகங்கள், தானியங்கள், மரச்செக்கு எண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை (Jaggery powder) ஆகிய பல பொருட்கள் இயற்கையாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. "உணவே மருந்து; மருந்தே உணவு" என்ற தாரக மந்திரமே இவரின் விவசாய வெற்றிக்கு முக்கிய காரணம்.

செலவு குறைவு:

விவசாயத்திற்கு அதிக செலவு செய்யும் விவசாயிகளுக்கு மத்தியில், தான் குறைந்த செலவில் (Low cost) விவசாயம் செய்வதாக கூறுகிறார். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தான் இயற்கை உரம். இரசாயன உரங்களை அறவே தவிர்த்து விட்டு, முற்றிலும் இயற்கை உரங்களைப் (Natural Compost) பயன்படுத்துவதால், உரத்திற்கான செலவு மிச்சமாகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால், ஏக்கருக்கு 8,000 செலவு ஆகும். ஆனால், எனக்கு இந்த செலவு இல்லை. விதை நெல்லை நான் ஆண்டுதோறும் வாங்குவதில்லை. வருடந்தோறும் விளைச்சலின் போது, அடுத்த முறை சாகுபடிக்காக விதை நெல்லை தனியே எடுத்து வைப்பதால், விதை நெல் செலவும் எனக்கு இல்லை என்கிறார் இயற்கை விவசாயி செல்வம்.

Natural Farming

உற்பத்தியும், வியாபாரமும்:

விவசாயி செழிப்பாக வளர வேண்டுமெனில், உற்பத்தி மட்டும் போதாது. உற்பத்தியோடு வியாபாரத் திறனையும் அறிய வேண்டும். நான், 3 மாதங்கள் உற்பத்தி (Production) செய்தால், அடுத்த 3 மாதங்களுக்கு விளைச்சலை விற்பனை (Sales) செய்கிறேன். இதனால், நல்ல இலாபம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, என்னிடம் அரிசி வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்கள், உங்களிடம் அரிசி வாங்கி சாப்பிட்டால் நல்லாயிருக்கு என்று சொல்வார்கள். அதனைக் கேட்கும் போது எனக்குள் உற்சாகம் அதிகரித்து, மேலும் மேலும் இயற்கை விவசாயத்தை தொடர உத்வேகத்தை (Inspiration) அளிக்கிறது.

உணவே மருந்து:

ஒவ்வொரு ரக அரிசியும், தனித்தனியாக பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. கருப்புக் கவுணி அரிசி சர்க்கரை நோயைக் (Diabetes) கட்டுப்படுத்தும். நமது பாரம்பரிய அரிசி ரகங்கள், உடலில் கொழுப்புக் கட்டிகளை (Fat tumors) அழிக்க வல்லது. உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் பாரம்பரிய அரிசி ரகங்களை சரியான முறையில் உண்ண வேண்டும். இரவில் சுடுகஞ்சி, காலையில் பழைய கஞ்சி என அரிசியை பல்வேறு முறைகளில் சாப்பிட்டால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரில் நன்மை செய்யும் ஏராளமான பாக்டீரியாக்கள் (Bacteria) இருப்பதால், தேநீருக்குப் பதிலாக கஞ்சித் தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், வெயிலைத் தாங்கும் சக்தி கிடைக்கும்; நோய்களும் நம்மை அண்டாது என்கிறார் இந்த இயற்கை விவசாயி.

சிங்கார் இரக அரிசி:

சிங்கார் இரக அரிசி கருப்பு ஊதா நிறத்தில், இரண்டரை அடி உயரம் வளரக்கூடியது. இதன் வயது 120 நாட்கள். இதன் அரிசி தங்க நிறத்தில் மெலிதாக, நீளமாக இருக்கும். பிரியாணி செய்வதற்கு ஏற்றது. இந்த ரகத்தினை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கணிதக் குறியீடுகள் வடிவில் (+, -, ÷, ×, ∆) வயலில் விதைத்துள்ளேன். வயலோரம் செல்லும் மக்கள், இதனை ஆச்சரியத்துடன் பார்த்து என்ன ரக அரிசி என்று விசாரிப்பார்கள்.

Best Farmer Certificate

சொர்னமசிரி இரகம்:

பச்சை நிறத்தில் 2 அடியில் வளரக்கூடியது. மருத்துவ குணம் நிறைந்தது. சாப்பிட சுவையாகவும் இருக்கும். இதன் வயதும் 120 நாட்கள் தான்.

இராஜமுடி இரகம்:

இராஜாக்களின் தலையில் உள்ள கிரீடம் போல், இராஜமுடி நெல்லும் நேராக நிற்கும். இது, வெள்ளை நிற (white) அரிசி. ஒரு அடி இடைவெளிவிட்டு பயிரிட்டுள்ளேன்.

கிச்சடி சம்பா இரகம்:

நாலரை அடி வளரக்கூடிய கிச்சடி சம்பா, 140 நாட்கள் வயதுடையது. இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால், மூட்டுவலி வராது. சர்க்கரையின் அளவும் குறையும்.

கருப்பு கவுணி இரகம்:

5 அடி வளரக்கூடிய, கருப்பு நிற அரிசி. சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. ஒன்றே கால் அடி இடைவெளியில் பயிரிட்டுள்ளேன்.

ரோஜா பொன்னி இரகம்:

ஆத்தூர் கிச்சடி சம்பா நெற்பயிரின், விளைச்சலின் போது வரப்பு ஓரத்தில் இந்த ரோஜா பொன்னி தானாகவே உருவானது. 5 அடி வளரக்கூடியதும், ரோஸ் நிறத்திலும் இருக்கும். ரோஸ் நிறத்தில் இருந்ததால், நண்பருடன் கலந்தாலோசித்து நான் தான் ரோஜா பொன்னி என்று பெயர் வைத்தேன். இந்த இரகத்தை, விவசாயிகளுக்கு சென்ற ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறேன்.

வைகறைச் சம்பா:

நெல் ஜெயராமன் (Paddy Jayaraman) அவர்கள், எனக்கு இலவசமாக கொடுத்தது தான் வைகறைச் சம்பா அரிசி. 6 அடி வளரக்கூடியது. வைக்கோல் (Straw) அதிக அளவில் கிடைக்கும்.

Natural Farming

விருதுகள்:

உலக விவசாயி தினத்தில் (World Farmers Day), சிறந்த விவசாயி விருதை தமிழக அரசு வழங்கியது. மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் உள்பட பல விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். இரசாயன உரங்களை தவிர்த்து விட்டு, இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து, சத்தான உணவுகளை மக்களுக்கு அளிப்பதே என் முதல் நோக்கம் என்கிறார் செல்வம்.

இயற்கை முறையில் விவசாயம் செய்தால், நல்ல இலாபம் அடைவதோடு மனத்திருப்தியும் கிடைக்கும் என்பதற்கு இயற்கை விவசாயி செல்வம் தான் சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும் விவரங்களுக்கு

செல்வம் இயற்கை அங்காடி
எழில் காம்ப்ளக்ஸ்
மழவை, குமாரக்குடி
9600384315 / 8526993276.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைக்கடை! வேளாண் கல்லுாரியில் ‘கிரீனி மீல்ஸ்’ அறிமுகம்!

English Summary: Paddy production naturally! Achievement Natural Farmer Selvam! Published on: 30 November 2020, 10:13 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.