இந்தியவின் 10 மாநிலங்களில் இதுவரை பறவை காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே கொரோனா தொற்று மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உயிர்க்கொல்லி நோயான பறவைக் காய்ச்சல் (Avian Influenza) சிக்கன் பிரியர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பரவுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் 3 மாநிலங்கள் பாதிப்பு
இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதன் மூலம் பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில், புதுடெல்லி மற்றும் சஞ்சய் ஏரி பகுதிகளில் முறையே காகங்களும், வாத்துகளும் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி மாவட்டத்தில் கோழிகளிடையேயும் மற்றும் மும்பை, தானே, தபோலி மற்றும் பீட் ஆகிய பகுதிகளில் காகங்களிடையேயும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காகங்கள் உள்பட 200க்கும் அதிகமான பறவைகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், நீர் நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பறவை சந்தைகள், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், இறந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்தவும், கோழி பண்ணைகளின் உயிரி-பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!
பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கும் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் நிலவரத்தை நெருங்கிக் கண்காணிப்பதற்காகவும், மனிதர்களிடையே நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காகவும் சுகாதார அதிகாரிகளோடு சிறப்பான முறையில் தகவல் தொடர்பையும், ஒருங்கிணைப்பையும் உறுதி செய்யுமாறு மாநில கால்நடை பராமரிப்புத் துறைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க...
விவசாயத்தில் ஜெயிக்க விவசாயக் குடும்பப் பின்னணி கட்டாயமில்லை- சாதனை பெண் விவசாயி கிரிஜா!