பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
கேரளா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்ட வருகின்றன.
இதை யடுத்து , பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து கோழிகளை தமிழகத்திற்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காகக் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி (Bird flu panic)
இதனிடையே பறவைக்காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
எஞ்சிய 2 கோடி முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் பீதியால் முட்டையை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது.
2 கோடி முட்டைகள் தேக்கம் ( 2 crore eggs stagnant)
கேரளம் மற்றும் வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து முட்டை அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடையும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 2கோடிக்கும் அதிகமான முட்டைகள் விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர ஆலோசனை (Emergency Meeting)
இதனிடைய நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது
பறவை காய்ச்சல் பீதியால் வடமாநிலம் உள்பட பல்வேறு மண்டலங்களிலும் முட்டை விலை சரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி முட்டை வியாபாரிகள் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் மற்ற மண்டலங்களுக்கு இணையாக முட்டையிலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முட்டை விலை குறைப்பு (Reduction in egg prices)
முட்டைகள் தேக்கமடைவதை தவிர்க்க அகில இந்திய விலைக்கு ஏற்ப முட்டை விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கூறியதால் முட்டை விலை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 420 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் படிக்க...
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!
கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வரத் தடை!