ஆடம்பரம், நவீன உலகம், மக்கள் தொகை பெருக்கம், தனிமனித ஊதிய உயர்வு, இவை அனைத்தும் இன்று வளர்ந்து வரும் காலகட்டங்களில் உணவு உண்ணும் பழக்கத்தில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கால்நடைகளிடம் இருந்து கிடைக்கும் பால், முட்டை, கறி ஆகியவற்றின் தேவை இன்னும் அதிகரித்து உள்ளது. ஆனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பெருமளவில் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவாலில் உணவுப் பாதுகாப்பும் ஒன்று. போதிய நீர் வளங்கள் குறிப்பாக நிலத்தடி நீர் கிடைக்காதது, நிலம் துண்டிக்கப்படுதல், போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் விவசாய நிலங்களை குடியிருப்பு திட்டங்களாக மாற்றுவது என உணவு உற்பத்திக்கு பல தடைகள் உள்ளன.
தீவன தட்டுப்பாட்டிற்கு மாற்று முறையாக எளிய முறையில் வீட்டிலேயே கால்நடைகளுக்கு பசுந்தீவனம் எப்படி தயாரிப்பது என்னும் முயற்சிதான் இந்த மண்ணில்லா தீவனம். மண் இன்றி விவசாயம் சாத்தியமா? ஆம் சாத்தியமே! ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) திட்டமானது மண்ணிலாமல் தண்ணீரை மட்டும் கொண்டு மிக குறைந்த காலத்தில் தீவன பயிர் வளர்ப்பு முறையாகும்.
இம்முறையின் மூலம் நாம் பெறும் பயன்கள்:
- குறைந்த காலக்கட்டத்தில் பசுந்தீவன உற்பத்தி.
- தண்ணீர் பயன்படாடு மிகவும் குறைவு.
- பயிா்நிலங்களின் தேவையில்லை.
- மிக குறைந்த இடத்தில் அதிகளவில் பசுந்தீவன உற்பத்தி.
- குறைந்த வேலையாட்கள்.
- குறைந்த முதலீடு.
- வறட்சி காலங்களில் கால்நடைகளுக்ககு தீவனத்தட்டுப்பாட்டை குறைக்கும்.
- எளிதில் செரிமானம் ஆக கூடியது.
இந்த முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் மண், குச்சி போன்றவை இல்லாததால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
பசுத்தீவன உற்பத்திக்கு தேவையானவை:-
- தேவையான அளவு விதைகள் (மக்காச்சோளம், கோதுமை, சோளம், கொள்ளு, பார்லி).
- தேவையான அளவு தண்ணீர்.
- சிறிய பிளாஸ்டிக் டிரேக்கள் (டிரேக்கள் அடியில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும்).
- நீர் தெளிப்பான்கள்.
- வெளிச்சம் குறைவான சிறிய அறை.
- வெப்பநிலை 25 முதல் 28 டிகிரி வரை தேவை,
- காற்றில் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதம் இருக்க வேண்டும்.
இப்போது செய்முறையை பார்க்கலாம்:-
- 5.5 சதுர அடி உள்ள நெகிழி தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவு தானியங்களை எடுத்துக்கொள்ளவும். தேவையான தானியங்களை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். ஊறிய விதையை நூல் துணி அல்லது சணல் சாக்கில் 24 மணி நேரம் கட்டி வைக்கவும். பின்பு விதைகளை நெகிழி தட்டில் கொட்டி காற்றோட்டமாக வைக்கவும்.
- பிறகு காற்றோட்டமாக இருந்த விதைகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று நுண்ணிய துகள்களாக தண்ணீர் படும்படி தெளிக்க வேண்டும்
- தண்ணீர் தெளிப்பது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய பணியாகும், தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்தால் அழுகி வீணாக போய்விடும், குறைந்தால் முளைப்பின்றி போய்விடும். எப்போதும் பதம் மாறாமல் வைத்திருக்க வேண்டும். முன்றாம் நாள் வேர்கள் பரவலாக காணப்படும்.
- நாட்கள் செல்ல இலைகள் தேற்றும்.
- 8 நாட்களில் நாற்று போன்ற பசுந்தீவனம் தயார்.
இம்முறையின் மூலம் பொதுவாக ஒரு கிலோ தானியத்திற்கு 6 முதல் 7 கிலோ பெற முடியும். இது ஒவ்வொரு தானியத்திற்கும் மாறுபடும். அதிகப்படியான உற்பத்தி மக்க சோளத்தில் காணப்படுகிறது. சத்தான சுவையான இவ்வகை தீவனங்கள் கால்நடைக்கு பிடித்தமான தீவனம். இதில் உள்ள அனைத்து பகுதிகளும் அதாவது விதை, இலை, வேர் ஆகிய மூன்றும் பசுக்கள் நன்றாக அசைபோட்டு ஜீரணம் செய்யும்.இந்த முறையின் மூலம் வருடம் 365 நாளும் தீவனம் தயாரிக்க முடியும் .எல்லாவற்றையும் விட இதனை 100 % இயற்கையாகவே உற்பத்தி செய்யலாம் அசைபோடும் விலங்குகளோடு மற்ற விலங்குகளான முயல், குதிரை, பன்றி போன்றவற்றுடன் கோழி, வாத்து வகைகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம் . எருமைக்களுக்கு 15 முதல் 20 கிலோவும் ,மாடுகளுக்கு 10 முதல் 15 கிலோவும் ,ஆடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோவும் அளிக்கலாம்.
அதுமட்டுமின்றி இம்முறையை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகவும். வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிய செயல் முறை விளக்கத்திற்கு இந்த காணொளியை பார்க்கவும். https://youtu.be/wNDnzqzqlwc
பா.டயானா பிரியதர்ஷினி
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி-09.
Share your comments