ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றத்த தாழ்வுப் பகுதி காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலேர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலேர்ட் என்பது, 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்பதற்கான எச்சரிக்கை. எனவே தேவையான முச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்திருப்பதால், கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது 12 முதல் 20 சென்டி மீட்டர் வரையிலான ஆரஞ்சு அலேர்ட் (Orange Alert)
அடுத்த 24 மணி நேரத்திற்கு திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அவலாஞ்சியில், அதிகபட்சலை 39 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஊட்டி
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் கன மழையால், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் குந்தா அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறின. கூடலூர் முதல்மைல் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் புறமணவயல் பழங்குடி காலனிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.
பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வேடன்வயல் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
முதுமலை-பந்திப்பூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துத் தடைபட்டது.
உதகையில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகம், படகு இல்லம் சாலை உட்பட பல பகுதிகளில் மின் கம்பங்களின் மீது சாய்ந்தன. இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
ஆட்சியர் அறிவுறுத்தல்
வரும் 8-ம் தேதி வரை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏதும் ஏற்படும்போது உதவி வேண்டுவோர், உடனடியாக 1077 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். எனவே தேவையான முச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for Fishermen)
வரும் 9ம் தேதிவரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!
மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!