தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) தனது 42-வது நிறுவன ஆண்டை கண்டது. இந்த நிறுவன விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நீர்வளத் துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் சந்தீப் சக்சேனா ஐ.ஏ.எஸ், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவானது அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நபார்டு மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி கடன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்புடன் செயல்பட்டு கிராமப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் நபார்டு தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களைக் கணினிமயமாக்கும் திட்டத்தில் முனைப்புடன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் இன்று தங்கள் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ள நிலைக்கு இந்த வங்கியும் ஒரு காரணம் எனப் பல தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
விவசாயிகள் தயாரிக்கும் சிறுதானியங்களில் சுவையான உணவுகள், மஞ்சள் ஊறுகாய், வெர்ஜின் தேங்காய் எண்ணெய் என்று பல வகையான உணவுப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நபார்டு வங்கி இணையதளம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என விழாவிற்கு வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் வேளாண் விளைபொருள்கள் விற்பனையிலும் சாதனை படைப்பார்கள் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சேலம் மாவட்டம் வசிஷ்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட சிறப்புறச் செயல்படும் 5 அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதோடு, சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட 3 நீர்வடிப்பகுதி திட்டங்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த சிறுதானிய உணவுகள், சத்துமாவு, ஊறுகாய் முதலான உணவுப் பொருள்களும் விழா அரங்கில் காட்சி வைக்கப்பட்டிருந்தன. இவை நிகழ்விற்கு வந்தோரைக் கவர்ந்திழுத்தன.
மேலும் படிக்க