வன விலங்குகளை தொந்தரவு செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது என எச்சரித்து வரும் வனத்துறையினர், காட்டு யானையுடன் வீடியோ எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த வாரம் வியாழன் அன்று, ஒரு சுற்றுலாப் பயணி தனது காரில் இருந்து இறங்கி காட்டு யானையின் முன் நின்று எடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. வீடியோவில் சுற்றுலாப் பயணியின் செயல்களை கண்டு யானை அச்சுறுத்தும் விதத்தில் பிளிறத் தொடங்கியது. மேலும் அந்த சுற்றுலாப் பயணி மிருகத்தின் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது போன்று காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் அந்த மனிதனின் செயலைக் கவனித்து, ஹார்ன் அடித்ததால், யானை அவரைத் தாக்காமல் பின்வாங்கி சென்றது.
வைரலாக மாறிய வீடியோவினை பலரும் பதிவிட்டு தங்களது கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யத் தொடங்கினர். அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, பென்னாகரம் வனச்சரகர் ஜி.கே.முருகன் வீடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, யானையினை தொந்தரவு செய்த நபர் மேக்கலாந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த கே.முருகேசன் (55) என அடையாளம் கண்டனர். பின்னர் அவருக்கு அறிவுரைகள் வழங்கி வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனச்சரகர் முருகன் முன்னணி ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், “சுற்றுலா பயணிகள் காடு மற்றும் விலங்குகளை மதிக்க வேண்டும். இந்த ஒரு சுற்றுலாப்பயணியின் செயல் அவரது உயிரை பறிப்பதுடன் மற்றவர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அவரது அதிர்ஷ்டம், காட்டு யானை பின்வாங்கி விட்டது. தற்போது ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்லும் பாதையில் யானைகளை சந்திக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து உங்கள் வாகனத்தின் ஹாரன்களை ஒலிக்கவோ, யானையுடன் செல்ஃபி எடுக்கவோ முயல வேண்டாம். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் யானை நடமாட்டத்தை கவனித்தால், வாகன விளக்குகளை துண்டித்துவிட்டு, யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே செல்ல வேண்டும். யானைகள் பொதுவாக சிறிய அச்சுறுத்தலால் தூண்டப்படுகின்றன. எனவே பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.
கோடைக்காலம் துவங்கிய நிலையில் வனவிலங்குகள் நீர், மற்றும் உணவு தேடி காட்டிலிருந்து வெளியேறும் சூழல் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலாப்பயணிகள் சாலை விதிகளை கடைப்பிடித்து பயணிப்பதுடன், வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது அவசியம் என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
pic courtesy: Viral video screen shot
மேலும் காண்க:
தமிழகத்தில் உர இருப்பு எவ்வளவு இருக்கிறது? அமைச்சர் அறிக்கை வெளியீடு