நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து இருந்த நிலையில், ஒன்றிய அரசின் தலையீட்டு காரணமாக ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் விலை குறைந்துள்ளது.
நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலைமையை ஆய்வு செய்த பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16, 2023) முதல் NAFED மற்றும் NCCF மூலம், டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலையைப் பொறுத்து நாளை முதல் இது பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் மொபைல் வேன்கள் மூலம் தக்காளியை கிலோவுக்கு ரூ.90 என்கிற தள்ளுபடி விலையில் ஒன்றிய அரசு விற்பனையினை தொடங்கியது. சனிக்கிழமை மேலும் சில நகரங்கள் சேர்க்கப்பட்டன.
இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (நாஃபெட்) ஆகியவை மையத்தின் சார்பில் மொபைல் வேன்கள் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகின்றன.
பருவமழை மற்றும் குறைந்த சாகுபடி காரணமாக சில்லறை சந்தையில் தக்காளியின் விலை சில முக்கிய நகரங்களில் கிலோவுக்கு ரூ.250 வரை உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை தொகுத்துள்ள தரவுகளின்படி, அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி சில்லறை விலை சனிக்கிழமையன்று ஒரு கிலோவுக்கு ரூ.116.86 ஆக இருந்தது. அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 ஆக இருந்தது.
பெருநகரங்களினை பொறுத்தவரை தக்காளி டெல்லியில் கிலோ ரூ.178 ஆகவும், மும்பையில் கிலோ ரூ.150 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.132 ஆகவும் இருந்தது. அதிகபட்சமாக ஹாபூரில் கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
பொதுவாக குறைந்த உற்பத்தி மாதங்களான ஜூலை-ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தக்காளி விலை உயரும். ஆனால் நடப்பாண்டு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கட்டுக்கடங்காது அதிகரிக்கத் தொடங்கியது.
NCCF நிர்வாக இயக்குநர் அனிஸ் ஜோசப் சந்திரா பிடிஐயிடம் பேசுகையில், மதனபள்ளி (ஆந்திரப் பிரதேசம்), கோலார் (கர்நாடகா) மற்றும் சங்கனேரி (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள மூன்று மண்டலங்களில் ரேஷன் கடை மூலமாக கிலோ ரூ.60 என்கிற அளவில் தக்காளி விற்பனை அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தக்காளியினை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் ஏறுமுகமாக இருப்பது பொது மக்கள் மத்தியில் கவலையினை உண்டாக்கியுள்ளது.
மேலும் காண்க: