1. கால்நடை

பண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்

KJ Staff
KJ Staff
Profitable Poultry Farming

குளிர் காலமானது இறைச்சிக் கோழி உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவிலான சுற்றுப்புற வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் ஒளி காலம் போன்றவை பண்ணையாளர்களுக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குகின்றன. மேற்கூறிய காரணங்களால் இறைச்சிக் கோழிகளில் இறப்பின் மூலமாக நேரடியாகவோ அல்லது தீவன மாற்று திறன் குறைந்து அதன் மூலம் மறைமுகமாகவோ பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

புதிதாக வாங்கிய ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அதன் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது மிகப் பெரும் சவாலாக விளங்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் கொட்டகையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையை பராமரிக்க வேண்டும். நாம் வாயு வெப்ப அளிப்பான்கள் அல்லது மின் வெப்ப அளிப்பான்கள்அல்லது மட்பாண்டங்களில் கரித்துண்டுகளை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்பம் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் கோழி கொட்டகையில் வெப்பநிலையை பராமரிக்கலாம்.

Heat Lamp can Protect new born

குறைந்த ஒளி காலத்தை தவிர்ப்பதற்காக பல்புகளை பயன்படுத்தி செயற்கையாக வெளிச்சத்தை கொடுக்கலாம். பொதுவாக கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படும் கொட்டகையினுள் குண்டு பல்புகளை பயன்படுத்தலாம். பல்புகளை தொங்கவிடும் உயரம் வெப்ப நிலையை தீர்மானிக்கிறது. பல்பின் அடிப்பகுதியில் கோழிக்குஞ்சுகள் கும்பலாக காணப்பட்டால் கூடுதலான வெப்பம் தேவை என்றும் பல்பின் அடிப்பகுதியிலிருந்து கோழிக்குஞ்சுகள் விலகி நின்றால் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள கோழிகளும்,  கோழிக்குஞ்சுகளும் அதிகப்படியான எரிசக்தியை பயன்படுத்துவதால் கோழிகளுக்கு அதிகப்படியான எரிசக்தி நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். மேலும், இந்த காலத்தில் கோழிகளின் தீவனம் உட்கொள்ளும் விகிதமும் அதிகமாக இருக்கும். குளிர்ந்த நீரை கொடுக்காமல் வெதுவெதுப்பான நீரை கொடுப்பது சிறந்தது. குறைந்தது 23 சதவீதம் புரதச்சத்தும் 3400 கிலோ கலோரி எரிசக்தியும் உள்ள தீவனம் தயாரித்து அதனை தேவைக்கேற்ப நாளொன்றுக்கு பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கலாம்.

குளிர் காலங்களில் கோழி கொட்டகையினுள் காற்றோட்டத்தை உறுதி செய்வதும் முக்கியம் ஆகும். அதிகப்படியான ஈரப்பதம் கோழிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். கோழிகளின் எச்சம் மற்றும் சுவாசத்தின் மூலமாக அதிகப்படியான ஈரப்பதம் கொட்டகையினுள் நிலவுகிறது. இதனால் ஈரமான ஆழ்கூளம், அமோனியா வாயு தேக்கம் போன்றவை ஏற்பட்டு அதனால் சுவாசக் கோளாறுகள்,  இரத்தக் கழிச்சல் நோய்,  இறப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எக்ஸாஸ்ட் ஃபேன் போன்றவற்றை பொருத்தி கொட்டகையினுள் காற்றோட்டத்தை உறுதி செய்யலாம்.

Winter Care and Protection

குளிர்காலங்களில் ஆழ்கூலத்தின் உயரம் குறைந்தது 15 சென்டிமீட்டர் அளவிற்காவது இருக்க வேண்டும். நெல் உமி, வைக்கோல், தவிடு, மரத்தூள், நிலக்கடலையின் தோல் மற்றும் உடைத்த சோளக்கதிர் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கோழிகளுக்கு வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்த முடியும். மேலும், ஆழ்கூளத்தை கையில் எடுத்து பார்க்கும் பொழுது கட்டி கட்டாமல் இருக்க வேண்டும். அதிகப்படியான ஈரப்பதம் இருந்தால் இவை கையில் பிடித்து பார்க்கும் பொழுது கட்டி பிடித்து கொள்ளும். இவை இரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.

மேலும் இக்காலத்தில் கோழிகள் தண்ணீர் எடுக்கும் அளவு குறைவாக இருக்கும் என்பதால் ஏதேனும் நுண்ணுயிர் எதிர் மருந்துகளையோ தடுப்பு மருந்துகளையோ அல்லது தடுப்பூசி மருந்துகளையோ தண்ணீரில் கலந்து கொடுக்கும் பொழுது சில மணி நேரங்களுக்கு முன்பாக கொட்டகையில் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தி பிறகு கொடுப்பதன் மூலம் எல்லா கோழிகளுக்கும் மருந்து சென்றடைவதை உறுதி செய்யலாம்.

மேற்கூறிய நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் சவாலான குளிர்காலத்தில் உற்பத்தி இழப்பை தடுத்து பண்ணையாளர்கள் லாபம் ஈட்டலாம்.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

English Summary: How Poultry Framers take care of Chickens during this winter? How to Avoid Losses? Published on: 27 December 2019, 05:25 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.