1. கால்நடை

காளான் வளர்ப்பில் காளான்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள்

KJ Staff
KJ Staff

வேற்று நிற பூசணங்கள்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

  • காளான் படுக்கையில் வெண்மை நிறக் காளான் பூசணத்தை தவிர பசுமை நிறத்தில் ஆஸ்பர்ஜில்லஸ், டிரைக்கோடெர்மா, பெனிசிலியம், வெளிர் பச்சை நிறத்தில் கிட்டோமியம், கருமை நிறத்தில் ரைசோபஸ் தோன்றும்.
  • சுகாதாரமற்ற முறையில் காளான் படுக்கை தயாரித்தல் மற்றும் குடிலை சரியாக பராமரிக்காததால் இந்நோய் காணப்படும். நோய் காரணிகள் வேகமாக வித்துப் பெருக்கம் செய்து பண்ணை முழுவதும் பரவிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பூசண வளர்ச்சி நிறைவடையாத படுக்கையில் சிறு புள்ளிகளாக வேற்று பூசணங்கள் தென்பட்டால் அந்த இடத்திலுள்ள வைக்கோல் துண்டுகளை வெட்டி எடுத்தபின் அந்த இடத்தில் 0.05 சத மேன்கோசெப் பூசணக் கொல்லியை நனைத்து பஞ்சினால் நன்றாகத் துடைக்க வேண்டும். படுக்கையின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்

நியூரோஸ்போரா தீப்பூசணம்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

படுக்கையில் தீயின் நிறத்தில் பூசணங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். மிகவும் சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் படுக்கை தயாரித்தால் தோன்றும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்நோயை அழிப்பது மிகவும் கடினம். எனவே நோய் தாக்கிய படுக்கையை அகற்றி எரித்து விட வேண்டும்.

கடுகு போன்ற பூசண இழை முடிச்சுகள்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

  • ஸ்கிளிரோசியம் ஒரைசே எனும் பூசணம் காளான் படுக்கையில் கடுகு போன்ற பூசண இழை முடிச்சுகளாக தோன்றும். மேலும் காளான் பூசண வளர்ச்சி திட்டு திட்டாக காணப்படும்.
  • வைக்கோலை நன்றாகப் பதப்படுத்தாமல் படுக்கை தயாரித்தால் இந்நோய் தாக்குதலை காணலாம்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நோய் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மஞ்சள் திட்டு நோய்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

பால்காளானில் மேற்பூச்சு மண்ணில் ஆரம்பத்தில் மஞ்சள் திட்டுக்களாக தோன்றும். பூசணம் பின் காய்ந்து கூட்டம் கூட்டமாக குச்சிகள் போன்ற வளர்ச்சி காணப்படும். மேற்பூச்சு மண்ணில் அதிக ஈரப்பதம் இருந்தால் இந்நோயை காணலாம்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • மேற்பூச்சு மண்ணின் மீது அதிக ஈரப்பதம் இருக்காதவாறு பாரமரிக்க வேண்டும்.
  • நோய் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இளஞ்சிவப்பு நோய்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

  • பால்காளானில் புதிதாக டாக்டிலியம் டென்ட்ராய்ட்ஸ் எனும் பூசணம் நோய் ஏற்படுத்துகின்றது.
  • மேற்பூச்சு மண்ணில் ஆரம்ப நிலையில் அப்பூசணம் காளான் பூசணம் மாதிரி படரும்.
  • பின் காளான்களின் மேல் படர்ந்து காளான்களின் தண்டுக்குள் உட்பகுதியில் இளஞ்சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.
  • மேற்பூச்சு மண்ணை சரியான முறையில் தொற்று நீக்கம் செய்யாவிட்டால் இந்நோய் பண்ணை முழுவதும் பரவி காளான்களை அழுக செய்துவிடும்.
  • இந்நோய் தோன்றி 2-3 நாட்களில் தீவிரம் அடைந்து காளான்கள் அனைத்தும் அழுகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நோய் வராமல் தடுக்க மேற்பூச்சு கலவையை வெப்பமூட்டியில் அழுத்தத்துடன் ஒன்றறை மணிநேரம் கண்டிப்பாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும். நோய் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்
  • பால்காளான் கூண்டில், தலை, சுவர் மற்றும் கூரை பகுதிகளில் 0.1 சதம் கார்பன்டாசிம் தெளிக்கவும். பதினைந்து நாள் இடைவெளியில் காளான் கூண்டில் பொட்டாசியம் பெர்மாங்கனேட், பார்மலின் (2:1) கொண்டு புகைமூட்டம் செய்த பின் படுக்கைகளை வைக்கவும்.

பாக்டீரியா நோய்

நோய் மற்றும் நோயின் அறிகுறிகள்

நோய் தாக்கி படுக்கைகளில் காளான் பூசணம் வளர்ச்சியின்றி திட்டுத் திட்டாக பிசுபிசுப்பாக துர்நாற்றத்துடன் காணப்படும். மேலும் இப்படுக்கைகளை காளான் ஈக்கள் முட்டையிடுவதால் நோய் அதிக அளவில் பரவும். காளான் படுக்கை தயாரிக்கும் போது வைக்கோலில் அதிக ஈரப்பதம் இருந்தால் இந்த நோய் தாக்கும். மேலும் காளான்களின் மேல் அதிக ஈரப்பதம் இல்லாதவாறு பராமரிக்கவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தரமான மஞ்சள் நிறமடையாத காளான் வித்துக்களை உபயோகிக்கவும். வைக்கோலில் ஈரப்பதம் 65 சதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. படுக்கைகளின் மேல் குளோரின் கலந்த தண்ணீரை (10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பிளீச்சிங் பவுடரை கலக்கவும்) அல்லது ஸ்டெபட்ரோமைசின் சல்பேட் அல்லது அக்ரிமைசின் போன்ற பாக்டீரியா கொல்லிகளை 10 லிட்டர் தண்ணீருக்கு 1-1.5 கிராம் என்ற அளவில் கலந்து காளான் மொட்டுக்களின் மேல் தெளிக்கலாம். நோய் தாக்கிய படுக்கைகளை அகற்ற வேண்டும்.

காளானைத் தாக்கும் பூச்சிகள்

காளான்களில் அதிகமாக காளான் ஈக்களான போரிட் மற்றும் சியாரிட் இனங்களின் தாக்குதல் காணப்படும். மேலும் காளான் சிலந்திகளும் அதிகளவில் படுக்கைகளைத் தாக்கும்.

காளான் ஈ

அறிகுறிகள்

காளான் குடிலுக்கு வெளியே தண்ணீர் தேங்கி இருத்தல் மற்றும் மாட்டுத் தொழுவம் அல்லது குப்பைக் குழி அருகில் இருந்தால் காளான் ஈக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து காளான் படுக்கைகளில் முட்டைகள் இடும். அதிலிருந்து வெண்மை நிறப்புழுக்கள் தோன்றி காளான் பூசண இழைகளை தின்பதால் திட்டுத்திட்டான காளான் பூசண வளர்ச்சி தென்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

ஈக்கள் நுழையா வண்ணம் காளான் பண்ணையிலுள்ள சன்னல்களில் 35 காஜ் அளவிலான கம்பி வலைகள் பொருத்த வேண்டும். காளான்களின் மேல் படாதவாறு டைக்ளோர்வாஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 6மி.லி. அல்லது மாலத்தியான் 10 மி.லி. கலந்து தெளிக்கவும்.

காளான் சிலந்தி

அறிகுறிகள்

காளான்களில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறகுழிகள் காணப்படும். உற்று நோக்கினால் அதில் மிகவும் சிறிய பூச்சிகள் தென்படும். வெப்பநிலை 15° செல்சியஸ்க்கு கீழ் குறையும்போது இப்பூச்சிகள் அதிக அளவில் பெருகிக் காளான்களைத் தாக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

டைக்கோபால் (0.1 சதம்) அல்லது நனையும் கந்தகம் (0.1 சதம்) போன்ற மருந்துகளை கூரை மற்றும் மர அடுக்குகளின் மேல் தெளிக்க வேண்டும். இப்பூச்சிகள் தாக்கிய படுக்கைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இயற்கை சூழலினால் ஏற்படும் மாறுபாடுகள்

தண்டு நீண்டுதல் மற்றும் குடைப்பகுதி சிறுத்தல்

  • காளான்களின் தண்டுப்பகுதி நீண்டு மற்றும் குடைப்பகுதி சிறுத்து காளான் உருக்குழைந்து காணப்படும்.
  • பண்ணையில் வெளிச்சம் மிகவும் குறைந்து மேலும் கரியமில வாயு 30 சதவீதம் அதிகமானால் இவ்வாறு உருக்குழைந்து காணப்படும். குடிலில் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதத்திற்கு கீழ் குறைந்து வெப்பநிலையும் சீராக இல்லாவிட்டால் வறட்சியான சூழ்நிலை நிலவும். இதுவே மொட்டுக்கருகலுக்கு வழிவகுக்கும்.

மொட்டுக் கருகல்

மொட்டுக்கள் கருகி காணப்படும். இதனால் மகசூல் பாதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் காளான்களின் விற்பனை பாதிப்படையும்.

மேலாண்மை

  • காளான் படுக்கைகளை இறுக்கமாக தயாரிக்கக் கூடாது
  • குடிலின் உள்ளே காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் தேவைப்படும் அளவில் பராமரிக்க வேண்டும்
  • குடிலின் கரையில் தண்ணீர் தெளித்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • குடிலின் உட்புறத்தில் தொங்கவிடுவதால் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கலாம்

 

English Summary: Mushroom cultivation - Pest and Disease management Published on: 04 December 2018, 01:03 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.