
Credit : Dawn
கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில், தக்காளிச் செடிகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவில் தக்காளி விளைச்சல் நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில், தற்போது பெய்து வரும் தென் மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் அறுவடைக்கு தயாரான பல ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலான தக்காளிச் செடிகள் அழுகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

credit: Shutterstock
விலை அதிகரிப்பு (Price increase)
இதனிடையே கொரோனா நோய் தொற்று ஊரடங்கால், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும், கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்படும் தக்காளியும் முற்றிலும் நின்றுவிட்டது.
காய்கறி மார்க்கெட்டுகளான சேலம் - தலைவாசல், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், மதுரை - மாட்டுத்தாவணி, நாகர்கோவில் - வடசேரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள, 179 உழவர்சந்தைக்கு, கடந்த மாதம் வரை, தினமும், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளி, தற்போது, 30 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
இத்துடன் தற்போது விளைச்சல் பாதிப்பும் சேர்ந்துகொண்டாதால், சென்னை திருமழிசை காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனை மொத்தமாக வாங்கி வரும் சிறு வியாபாரிகள், மளிகைக் கடைகள் மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.

Credit : India today
ரூ.70க்கு விற்பனை
கடந்த மே மாதம் கிலோ ஐந்து ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ராக்கெட் வேகத்தில் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர வாசிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே விவசாயிகள் தற்போது மீண்டும் தக்காளியை விதைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதால், அடுத்த ஒரு மாதத்திற்கு விலை இதே நிலையில் நீடிக்கும் என காற்கறி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வெங்காயம், பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்ந்திருக்கிறது.
மேலும் படிக்க...
ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!
மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!
Share your comments