1. விவசாய தகவல்கள்

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Will the Tamil Nadu government protect the palm and coconut industries?

கேரளா உட்பட அண்டை மாநிலங்களில் இயற்கை பானமான கள் விற்பனை நடந்து வரும் நிலையில், பனை, தென்னை தொழில்களை பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. பனை மரங்கள் நுங்கு, பதநீர், கள் என இயற்கை பானங்களை கொடுப்பதுடன் நிலம், நீர்வளத்தைக் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோல், தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்கலாம். தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாப்பதில் காட்டும் ஆர்வம், பதநீர், கள் விற்பனையில் காட்டப்படுவதில்லை. டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே நடத்துவதும், கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இதற்கு காரணம்.

கள்ளுக் கடை (Kallu Kadai)

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா உட்பட பல மாநிலங்களில் உயர்ரக வெளிநாட்டு மதுக்கடைகள் இருந்தாலும், கள்ளுக் கடைகளும் இயங்குகின்றன. இதன் பலனாக அம்மாநிங்களில் பனை, தென்னை மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவற்றில் கள் இறக்கப்படுவதால் விவசாயிகளும் பயனடைகின்றனர்.

குறிப்பாக கேரளாவில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு மதுபானக் கடை உள்ளது. ஆனால் 4,590-க்கும் மேற்பட்ட கள்ளுக் கடைகள் உள்ளன. இங்கு தென்னங்கள் தான் அதிகம் விற்கப்படுகிறது. தினசரி 8.25 லட்சம் லிட்டர் தென்னங்கள் உற்பத்தியாகிறது. 7.21 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ரூ.80 முதல் ரூ.100 வரையும், 750 மில்லி பாட்டில் ரூ.50, ஒரு கிளாஸ் ரூ.30 என பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

பயனடையும் விவசாயிகள் (Beneficial farmers)

உடலுக்கு கேடு இல்லாத கள்ளை ஏழைத் தொழிலாளர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். கேரளாவுக்கு சுற்றுலா வருவோர் மத்தியில் கள் பிரதான பானமாக உள்ளது. கள் இறக்கம் தொழிலின்மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். தமிழகத்தில் மது பானங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கள் இறக்குவதற்கும், விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் வலுத்துள்ளது.

கோரிக்கை (Request)

நாகர்கோவிலில் இயங்கும் பனை தொழில் பாதுகாப்பு இயக்கமான பால்மா மக்கள் அமைப்பின் இயக்குநர் ஜேக்கப் ஆபிரகாம் கூறியதாவது: பனை, தென்னை மற்றும் ஈச்சை ரங்களில் இருந்து இயற்கையான பானமான கள் கிடைக்கிறது. அதில் சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் பதநீராக அது மாறுகிறது. கள்ளில் ஆல்கஹால் கிடையாது. கள் ஒரு போதைப்பொருள் என இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. குழந்தைக்கு கொடுக்கப்படும் பலவித மருந்துகளில் உள்ள ஆல்கஹால் கூட கள்ளில் இல்லை.

தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனைக்கும் அனுமதி கோரிய, கள் இயக்கத்தினர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கள் உடலுக்கு எவ்வித தீங்கும் இல்லாத பானம் என்பதால் இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.

குமரி மாவட்ட வேளாண் மற்றும் பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: தேங்காய், இளநீரில் கிடைக்கும் வருவாயைவிட கள் மூலம் தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைப்பதை, கேரளா உட்பட பல மாநிலங்களில் பார்க்க முடிகிறது. எனவே, கள்ளுக் கடைக்களை தமிழகத்தில் அனுமதித்தாலே தென்னை மட்டுமின்றி, பனை மரங்களும் தானாகவே பாதுகாக்கப்படும். உடலுக்கு கேடு இல்லாத இயற்கை பானமான கள்ளில் செயற்கையாக போதை பொருட்களை சேர்ப்பதால் மட்டுமே உடலுக்கு கேடு வருகிறது. இதற்கு அரசு முறையாக சோதனை மேற்கொண்டு கள் விற்பனையை முறைப்படுத்தலாம். தமிழக அரசு காலம் கடத்தாமல் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.

மேலும் படிக்க

பாரம்பரிய நெல் விதைகள்: விவசாய கல்லுாரியில் விற்பனை!

வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிகவும்!

English Summary: Will the Tamil Nadu government protect the palm and coconut industries? Farmers demand to open kallu kadai! Published on: 13 March 2022, 08:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.