
Applications welcomed for Young Weavers Induction Programme
நாளொன்றுக்கு ரூ.250 ஊக்கத்தொகை என 45 நாட்களுக்கு நெசவு பயிற்சி வழங்கும் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா நாட்டிலேயே அதிக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் மாநிலம் தமிழகம் தான். நெசவு தொழிலில் இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நெசவு குறித்து பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவராக்கும் வகையில் இளம் நெசவாளர்களுக்கான நெசவு தூண்டும் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதனிடையே கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தினை (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters) ரூ.1.17 கோடி மதிப்பில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நோக்கம்:
- இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்.
- பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது.
- கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல்.
- வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல்.
- 2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல், கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல்.
- இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல்.
- பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- 18 முதல் 35 வயது வரை
- கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்திட வேண்டும்.
www.loomworld.in (அல்லது) இது தொடர்பாக 19.09.2023 அன்று வி.எச்.39, ரெட்டிவலசை நினைத்ததை முடிப்பவன் டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு வேலையில்லாத இளைஞர்/பெண்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
Share your comments