வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் ”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்:
மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2024-25 ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு. உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.
பசுந்தாளுரப் பயிர்கள்:
மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது "பசுந்தாளுரப் பயிர்கள்".
இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு "பசுந்தாளுர விதைகளை" வழங்கி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பா.முருகேஷ். இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ. குமாரவேல் பாண்டியன். இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Read more:
சூதாட்ட களமா விவசாயம்? விவசாயிகளின் நிலையான வருமானத்திற்கு தீர்வு என்ன?
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!