1. தோட்டக்கலை

மட்கு உரம் தயாரித்தல்: கம்போஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் உரம் சேகரிக்கும் முறை

KJ Staff
KJ Staff
composted coir pith

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது.

அதிக விகிதத்திலான கரிமச்சத்து, தழைச்சத்து மற்றும் குறைந்த அளவிலான உயிர் சிதைவு ஆகியவற்றால் தென்னை நார் கழிவு இன்றளவும் விவசாயத்திற்கு முக்கியமான கரிமச்சத்து மூலமாக கருதப்படவில்லை. எனவே கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கும், லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைப்பதற்கும், தென்னை நார்க்கழிவானது மட்க வைக்கப்படுகிறது. இவ்வாறு மக்கச்செய்வதால் உரச்சத்து அதிகரித்து, அதிக அளவிலான நார்க்கழிவு குறைந்து, அதிலுள்ள சத்துக்களை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாறுகிறது.

மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள்

* மட்கிய நார்க்கழிவினை மண்ணில் சேர்ப்பதால், மண்ணின் பண்புகள், உழவு ஆகியவை மேம்படுகின்றன. இது மணற்பாங்கான மண்ணின் கடினத்தன்மையை அதிகப்படுத்துகிறது மற்றும் களிமண்ணை காற்றோட்டமுள்ளதாக்குகின்றது.

* மண்துகள்களை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

* நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி, மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது.

* இதனை பயன்படுத்துவதால் மேல் (10-15 செ.மீ) மற்றும் அடி (15-30செ.மீ). மண்ணின் அடர்த்தி குறைகிறது.

* இந்த மட்கிய உரத்தில் அனைத்து தாவர சத்துகளும் இருப்பதால், இது செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது.

* மட்கிய உரமாதலால், இது மண்வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது.

*அம்மோனியமாக்கல், நைட்ரேட்டாக்கல் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்தல் ஆகிய வினைகள்   நுண்ணுயிரின் செயல்திறனால் அதிகரிக்கிறது.   

பயன்பாடுகள்

* எல்லாவகைப் பயிர்களுக்கும் எக்டருக்கு 5 டன் மட்கிய நார்க்கழிவு தேவைப்படுகிறது.

* இதனை விதைப்பதற்கு முன் அடி உரமாக இடவேண்டும்.

* நாற்றங்கால்களுக்கு, பாலித்தீன் பைகள் மற்றும் மண் தொட்டிகளில் நிரப்பவேண்டிய மண்கலவைகளுக்கு 20 சதவீதம் மட்கிய நார்கழிவானது, மண் மற்றும் மணலுடன் கலக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

* தென்னை, மா, வாழை மற்றும் பழமரங்கள் போன்ற நன்கு வளர்ந்த மரங்களுக்கு குறைந்த அளவு, மரத்துக்கு 5 கிலோ போதுமானது.

தென்னை நார்க் கழிவு கம்போஸ்ட் தொழில்நுட்பம்

மூலப்பொருட்களை சேகரித்தல்

நாரற்ற தென்னை நார்க் கழிவுகள், தென்னை நார்கழிவு தொழிற்சாலைகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நார்கள் முதலிலேயே சலித்து பிரித்தெடுக்கப்படுகின்றன. அல்லது மட்கவைத்தலின் முடிவில் பிரித்தெடுக்கப்படுகிறது. ஏனெனில், இந்த நார்கள் மக்காமல், மற்ற கழிவுகளையும் மட்குவதிலிருந்து தாமதப்படுத்துகிறது. எனவே மட்கவைத்தலின்போது, நார்களை பிரித்தெடுத்தல் நன்று.

coir pith

இடம் தேர்வு செய்தல்

சரியான இடத்தை தெரிவு செய்தல் நன்று. தென்னை மரங்களுக்கிடையிலோ அல்லது ஏதேனும் மர நிழலிலோ இடத்தைத் தெரிவு செய்தல் மிக்க பயனளிக்கும். ஏனெனில், மரங்களின் நிழலானது, ஈரப்பதத்தை மட்குகின்ற கழிவுகளில் தக்கவைக்கிறது. தரையானது நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சிமெண்டு பூசப்பட்ட தரை மிகவும் உகந்தது.

உரக்குவியல் அமைத்தல்

coir pith prepration

இந்த முறையிலான மட்கச்செய்தல், காற்றின் உதவியால் நடக்கிறது. எனவே நாம் குவியலை தரை மட்டத்திற்கு மேலே அமைக்கவேண்டும். இதில் குழிவெட்டுதல் மற்றும் கான்கிரீட் தொட்டி அமைத்தல் தேவையில்லை. இதில் நாரற்ற தென்னை நார்க் கழிவுகளை 4 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு நன்றாக பரப்பவும். முதலில் நாரற்ற கழிவுகளை 3 அங்குல உயரத்திற்கு பரப்பி நன்றாக நீர் தெளித்து ஈரப்படுத்தவும். பின் தழைச்சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப்பொருள், உதாரணமாக யூரியா அல்லது கோழிப்பண்ணை கழிவுகளை சேர்க்கவும். தழைச்சத்திற்காக யூரியா சேர்க்கப்பட்டால், 5 கிலோ யூரியாவை முதலில் 5 சரிபாகமாக பிரித்துக்கொண்டு பின்னர், அடுத்தடுத்த கழிவு அடுக்குகளில் ஒவ்வொரு பாகமாக சேர்க்க வேண்டும். தழைச்சத்திற்காக கோழி எரு சேர்க்கப்பட்டால், 1டன் கழிவுகளுக்கு 200 கிலோ கோழி எரு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த 200 கிலோ எரு தேவையான விகிதத்தில் பிரிக்கப்பட்டு, கழிவுகளில் சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1 டன் கழிவானது 10 சமபாகங்களாக பிரிக்கப்படுகிறது. முதல் அடுக்கின்மேல் 20 கிலோ கோழி எரு பரப்பப்படுகிறது. பிறகு நுண்ணுயிர் கலவைகளான புளூåட்டஸ் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை(2 சதம்) கழிவின் மேல் இடப்படுகிறது. இதேபோல், தென்னை நார்க் கழிவு மற்றும் தழைச்சத்து மூலப்பொருட்களை ஒன்றன் மேல் ஒன்றாக பரப்பவும். குறைந்தபட்சம் 4 அடி உயரத்திற்கு எழுப்புவது நன்று. ஆனால் 5 அடிக்கு மேல் பரப்பினால் கையாளுவதற்கு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம். உயரத்தை அதிகப்படுத்துவதால், மட்கதலின் போது வெளியிடப்படும் வெப்பத்தை தக்க வைக்க உதவுகிறது. அதே நேரத்தில் குறைந்த உயரம் கொண்ட குவியல்களில் உற்பத்தியாகும் வெப்பம் வேகாமாக வெளியேறிவிடுகிறது.

குவியலை கிளறிவிடுதல்

இந்த கழிவுக்குவியலை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். இதனால் புதிய காற்று உட்சென்று ஏற்கனவே அங்கு உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுகிறது. இந்த மட்கவைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில், மட்கவைத்தலுக்கு உதவும் நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு பிராணவாயு அவசியம். எனவே, குவியலை கிளறிவிடுதல் மறைமுகமாக நல்ல காற்றோட்டத்திற்கு உதவுகிறது. அல்லது, துளையுள்ள உபயோகமற்ற இரும்பு அல்லது பிவிசி பைப்புகளை செங்குத்தாகவோ, படுக்கைவாக்கிலோ புகுத்தி காற்றோட்டத்திற்கு வழிவகுக்கலாம்.

ஈரப்பதத்தை தக்கவைத்தல்

நல்ல தரமான உரங்களை பெற தேவையான ஈரப்பதத்தை தக்கவைத்தல் அவசியமாகும். மட்கவைத்தலுக்கு 60 சதவீத ஈரப்பதம் அவசியம்.  அதாவது, மட்க வைத்தலுக்கான கழிவு எப்பொழுதும் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும். அதே சமயம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிடவேண்டும். கழிவுகளுக்கு போதுமான ஈரப்பதத்தை பரிசோதிக்க, ஒரு கையளவு கழிவை எடுத்து, இரு உள்ளங்கைகளுக்கிடையில் வைத்து அழுத்த வேண்டும். இதில் நீர் கசிவு இல்லையெனில் இதுவே சரியான நிலையாகும்.

மக்கிய உரம் முதிர்வடைதல்

கழிவுகள் மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு கழிவுகளைப் பொருத்து மாறுபடும். எல்லா காரணிகளும் சரியான அளவில் இருந்தால், கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகிவிடும். கழிவுகளின் மட்குதலை அதன் இயற்பியல் கூறுகளை வைத்து முடிவு செய்ய முடியும். முதலில் கழிவுகளின் கொள்ளளவு குறைந்து, அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். இரண்டாவது, மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி அதன் துகள்கள் அளவில் சிறியதாக மாறி இருக்கும். மூன்றாவதாக, மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும். வேதியியல் மாற்றங்களை பரிசோதனைக் கூடத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதம் 20:1 என்ற அளவில குறைந்து இருக்கும். ஆக்ஸிஜன் வாயு உட்கொள்வது குறைவாக இருக்கும். நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துக்களின் அளவு அதிகமாக இருக்கும்.

மக்கிய உரம் சேகரிக்கும் முறை

மக்கிய உரத்தை சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். கம்போஸ்ட் குவியலை கலைத்து, நிலத்தில் நன்றாக பரப்பவேண்டும். இதனால் அதில் உள்ள சூடு தணிந்து விடும். பின்பு கிடைக்கும் மீதத்தையும் மறுபடியும் கம்போஸ்ட் படுக்கையில் இட்டு கம்போஸ்ட் செய்யலாம். இவ்வாறு சேகரித்த உரத்தை நன்றாக பாதுகாக்க வேண்டும். நன்றாக காற்று உள்ள, நிழலான இடத்தில் குவியலாக இட்டு பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால், தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.

அட்டவணை:1.மட்காத மற்றும் மட்கிய தென்னை நார்க் கழிவில் உள்ள சத்துக்களின் அளவு

பண்புகள்

மட்காத தென்னை நார்க்கழிவு (%)

மட்கிய தென்னை நார்க்கழிவு (%)

லிக்னின்

30.00

4.80

செல்லுலோஸ்

26.52

10.10

கரிமச்சத்து

26.00

24.00

தழைச்சத்து

0.26

1.24

மணிச்சத்து

0.01

0.06

சாம்பல்சத்து

0.78

0.78

கால்சியம்

0.40

0.50

மக்னீசியம்

0.36

0.48

இரும்பு

0.07

0.09

மாங்கனீசு

12.50

25.00

துத்தநாகம்

7.50

15.80

கந்தகம்

3.10       

6.20

கரிமச்சத்து: தழைச்சத்து               

112:1

24:1

 

வரைமுறை

* பொருளாதார ரீதியில் இதனை வாங்கி, மிக அதிக அளவு நிலத்தில் இடுவது கடினம். அதனால் நாம் சொந்தமாக தயாரித்து, பண்ணையில் இடுவது நன்று.

* மட்கிய நார்கழிவை வாங்குவதற்கு முன், கழிவானது முற்றிலும் மட்கிவிட்டதா என்றும் தரச்சான்று ஆகியவற்றை பரிசோதிப்பது அவசியம்.

* நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்ப்பதால், இது நிலத்தில் சேர்ந்த பின்பும் அங்குள்ள சத்துக்களை கிரகித்துக்கொண்டு சிதைவடைகிறது. எனவே நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படைகிறது.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Organic farming! Agro waste management, Coir Pith Composting Technology and Benefits of Composted coir Pith Published on: 20 August 2019, 05:22 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.