1. தோட்டக்கலை

பழப்பயிர்கள் சாகுபடி - பப்பாளி

KJ Staff
KJ Staff

இரகங்கள்: கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும், உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் இரகங்கள்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் சாகுபடி செய்ய உகந்ததல்ல. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்கு வளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்: வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன்  செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழகள் எடுக்க வேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதைப்பு: ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள்

நாற்றாங்கால்: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.

நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஆண் பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றிற்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். மேலும் செடி ஒன்றிற்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா கொடுக்க வேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணோட்டச் சத்து: துத்தநாக சல்பேட் (0.5 %) + போரிக் அமிலம் (0.1 %) கலவையினை நடவு செய்த 4வது மற்றும் 8வது மாதத்தில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

பின்செய் நேர்த்தி

செடிகள் பூக்க ஆரம்பிக்கும் போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விட வேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்க வேண்டும். கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் இரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலித்தீன் பையில் ஒரு கிராம் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

வேர் அழுகல் நோய்: செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும்.

கட்டுப்பாடு: இதனைக் கட்டுப்படுத்த 0.1% போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்ததம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்க வேண்டும்.

அறுவடை

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்ய வேண்டும்.

வயது: 24 -30 மாதங்கள்

மகசூல்

கோ.2

200 -250 டன்கள் / எக்டருக்கு

கோ.3

100 -120 டன்கள் / எக்டருக்கு

கோ.5

200 -250 டன்கள் / எக்டருக்கு

கோ.8

120 -160 டன்கள் / எக்டருக்கு

கோ.7

200 -225 டன்கள் / எக்டருக்கு

பப்பாளியில் பால் எடுத்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கோ.2 மற்றும் கோ.5 இரகங்கள் பால் எடுப்பதற்கு உகந்தவை. இதில் கோ.2 என்ற இரகத்திலிருந்து கிடைக்கும் பாலில், அதிக நொதித்திறன் அடங்கியுள்ளது. எனவே பால் எடுக்க கோ.2 இரகம் சிறந்தது. பால் எடுத்த பிறகு இந்த இரகங்களில் பழங்களை உண்ண உபயோகப்படுத்தலாம். முதிர்ந்த காய்களில் இருந்து பால் சேகரிக்க வேண்டும். காய்களின் மேல் இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர் ஆழத்திற்கு நான்கு இடங்களில் நீளவாட்டில் கீறல் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சீறிவிடுவதற்கு கூரிய பிளேடு, கூரான மூங்கில் தண்டு அல்லது துரு ஏறாத கத்தியை உபயோகப்படுத்த வேண்டும். கீறல்களிலிருந்து வடியும் பாலை அலுமினியத் தட்டு, ரெக்சின் அல்லது பாலித்தீன் தாள்களில் சேகரிக்கவேண்டும். காய்களிலிருந்து பால் சேகரிப்பு அதிகாலையிலிருந்து காலை பத்து மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு முன்பு பாலெடுத்த அதே காய்களில் மறுபடியும் பால் சேகரிக்கலாம். இவ்வாறு எடுத்த பாலை, சூரிய ஒளியிலோ அல்லது 40 டிகிரி சென்டிகிரேடு உஷ்ணத்தில் செயற்கையான உலர் கருவிகளிலோ உலர்த்தவேண்டும். உலர்த்த தாமதம் ஏற்பட்டால் தரம் பாதிக்கப்படும். “பொட்டாசியம் மெடாபைசல்பைட்” என்ற இராசயனத்தை 0.05 சதம் என்ற அளவில் பாலுடன் சேர்த்தால் பாலில் உள்ள ப்பபெயின் என்ற நொதிப் பொருள் சேதாரம் அடைவதைத் தவிர்க்கலாம். பின் இவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

பால் மகசூலானது இரகம், பால் எடுக்கும் பருவம், மரங்களின் செழிப்பு மற்றும் சாகுபடி செய்யப்படும் பகுதி போன்ற காரணங்களைச் சார்ந்து இருக்கும். ஒரு எக்டரிலிருந்து சுமார் 3000 முதல் 3750 கிலோ வரை பால் எடுக்கலாம்.
பால் எடுக்கப்பட்ட பப்பாளி காய்களை அறுவடை செய்து டூடிஃபுரூட்டி எனப்படும் பேக்கரி (அ) அடுமானப் பொருள் தயார் செய்ய பயன்படுத்தலாம்.

 

 

English Summary: Papaya cultivation Published on: 21 November 2018, 12:56 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.