
Credit: IndiaMart
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கொரோனா ஊரடங்கால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.
ஜொலிக்கும் பட்டு (Silk Sarees)
திருமணம், வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா, கோவில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கும் பரிசுத்தமானதாகக் கருதப்படும் பட்டு சேலைகளை அணிந்துகொள்வது தமிழகப் பெண்கள் பாரம்பரியம்.
இதனைக் கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஊ.மாரமங்கலம், நமச்சிவாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக பட்டு நெசவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து நூல் வாங்கி வரப்படுகிறது.
பட்டு நெசவாளர்கள்
இங்கு நெசவு செய்யப்படும் பட்டுச் சேலைகள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பட்டு நெசவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக நெசவு தொழில் முடங்கியுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் முடங்கிப்போனது.

Credit: Keep me Stylish
விற்பனை இல்லை (No Sales)
எனினும் அரசின் தளர்வுகளை தொடர்ந்து, தற்போது பட்டு நெசவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விற்பனைக்கு வழி இல்லாததால், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன.
வறுமையின் பிடியில் (Poverty)
இதன் காரணமாக, பட்டு நெசவாளர்கள் வருமானம் இன்றி வறுமையில் தவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பிற பகுதியில் இருந்து பட்டு நூல் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த பட்டு நெசவாளர்கள் வேறு வழியின்றி, தற்போது கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை (Demand)
இது குறித்து முன்னாள் பட்டு நெசவு தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜெயமோகன் கூறுகையில், தேக்கமடைந்துள்ள பட்டு சேலைகளை கூட்டுறவு சங்கம், காதி கிராப்ட், கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். சமூக இடைவெளியுடன் கூடிய விழாக்கள் மற்றும் திருமணங்களை அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் வறுமையில் வாடும் ஓமலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவு தொழிலாளர்களுக்கு, மாதம் 2000 ரூபாய் வீதம் அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் பட்டுநெசவாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments