
kalaignar magalir urimai thittam scheme
தமிழக அரசின் சார்பில் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வங்கிக்கணக்கில் அரசின் சார்பில் வரவு வைக்கப்படும் 1000 ரூபாயினை மினிமம் பேலன்ஸ் , வாங்கிய கடனுக்கான வட்டி என வங்கிகள் பிடித்தம் செய்வதாக புகார்கள் எழுந்தன.
இப்புகார்கள் அதிகரித்த நிலையில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுப்போன்ற அரசின் திட்டத்தில் வழங்கப்படும் தொகையினை வேறு காரணங்களுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை சில வங்கிகள் மீறியுள்ளது வருத்தத்துக்குரியது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி செயல்படும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.65 கோடி மகளிருக்கு. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விரைவாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதாவது செப்-14 அன்றே பலரின் வங்கியில் ரூ.1000 செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி மாதந்தோறும் 15 ஆம் தேதி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பெண்களுக்கான ரூ.1000- களப்பணியாளர்கள் குறித்து முதல்வர் ட்வீட்
நிபா வைரஸ் எதிரொலி- பள்ளி,கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை
Share your comments