1. செய்திகள்

ஹெல்த் காலண்டர்! சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினம்

KJ Staff
KJ Staff
World snake Awareness day

இன்றைய தினம் சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதிகளவிலான விஷப் பாம்புகளை கொண்டிருக்கிற ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பாம்புக் கடியினால் ஏற்படும் மரணம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதமாக மிக அதிகமாக இருக்கிறது. பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாததே இதற்கான காரணமாக இருக்கிறது என்கின்றனர் ஊர்வன ஆர்வலர்கள்.

இந்தியாவில் சற்றேறக்குறைய 600 வகையான பாம்பு இனங்கள் இருக்கலாம் என்கின்றனர் இவர்கள். இவற்றுள் சுமார் 60 வகையான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. இவற்றுள்ளும் நாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை ஆகிய பாம்பு இனங்கள் மட்டுமே மிக அதிக விஷத்தன்மை கொண்டதாகவும் பெரும்பாலும் எல்லா பாம்புக்கடி மரணங்களுக்கும் காரணமாகவும் அமைகின்றன. பாம்புக் கடித்தவுடன் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் போதுமான அளவில் இல்லாததன் காரணமாகவே பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன. மட்டுமின்றி போதுமான அளவில் விஷ முறிவு மருந்துகள் இல்லாததும் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

king cobra

பாம்புகளின் விஷத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியவை, இரத்த ஓட்ட மண்டலத்தை பாதிக்கக் கூடியவை என இரண்டு வகையான விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் உள்ளன. இவற்றில் எந்த வகை பாம்பு கடித்தாலும் அறிகுறிகளின் அடிப்படையில் அதற்கான விஷமுறிவு மருந்துகளைக் கொடுத்து உயிரை காப்பாற்றி விட முடியும். ஆனால், கடித்த பாம்பினை உடன் எடுத்து செல்வது எந்த வகையான விஷம் அந்த பாம்பில் இருக்கிறது என்பதைத் தெரிந்து அதற்கேற்ற வைத்தியம் கொடுப்பதற்காகவே ஆகும். பாம்பு கடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

பாம்பு கடித்த இடத்துக்கு மேலே இருக்கமாக கட்டி விடுவதன் மூலம் தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுவதால் ரத்தத்தின் மூலமாக விஷம் உடல் முழுவதும் பரவுவதை தடுக்க முடியும். பாம்பு கடித்த இடத்தை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், விஷமுறிவு மருந்தை உடனடியாக கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாறாக கிராமங்களில் மந்திரித்தல், நாட்டு மருந்து கொடுத்தல், கை வைத்தியம் செய்தல் போன்றவற்றில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால் பெரும்பாலான மரணங்கள் ஏற்படுகின்றன.

kattuviriyaan

பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாலை நேரங்களில் இந்த பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே, இரவு நேரங்களில் தூங்கும்போது கொசுவலை பயன்படுத்தல் அல்லது உயரமான இடங்களில் படுத்தல் வெளியில் செல்லும் போது காலுக்கு செருப்பு அல்லது ஷூ போன்றவற்றை பயன்படுத்துதல், டார்ச் லைட்டை உடன் எடுத்துச் செல்லுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக இதுபோன்ற பாம்புக்கடி நிகழ்வுகளை தவிர்க்கலாம். மேலும், பாம்புகடி பற்றிய விழிப்புணர்வை கொண்டிருப்பதன் மூலமும் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது மூலமாகவும் இவற்றை தடுக்க இயலும்.

பாம்புக்கடி நிகழ்வுகளை விபத்து என்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் 2015 ஜூன் 19 அன்று இதனை புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய் என்று வகைப்படுத்தி அறிவித்து இருக்கிறது, உலக சுகாதார நிறுவனம். பிக்4மேப்பிங் (big4mapping) எனும் செயலி ஒன்றை வடிவமைத்து இதன் மூலம் நம் நாட்டில் பாம்பு இனங்களின் பரவல் குறிப்பாக விஷத்தன்மை உள்ள பாம்புகளின் பரவல், பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், பாம்புகளை பிடிப்பவர்கள், விஷமுறிவு மருந்தை இருப்பில் வைத்திருக்கும் மருத்துவமனைகள் போன்ற தரவுகள் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் மனித பாம்பு மோதல்களை தவிர்ப்பதோடு எளிதாக சிகிச்சை அளிக்கவும் முடிகிறது.

படை நடுங்க வேண்டிய அளவு எல்லா பாம்புகளும் விஷத்தன்மை வாய்ந்தவை அல்ல என்பதைத் தெரிந்துகொண்டு பாம்புகளை கண்டவுடன் அவற்றை அடித்துக் கொல்வதை விடவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளிடம் விழிப்போடு செயல்பட்டு பாம்புக்கடிகளால் நிகழும் மரணங்களை ஒழிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

Alimudeen S
IV BVSc&AH
Madras Veterinary College
TANUVAS, Chennai-07.

Dr. BAVA FAKHRUDEEN S
M.V.Sc. Scholar
Dept of vet. Medicine
College of Veterinary and animal sciences
Guru angad dev veterinary and animal sciences university
Ludhiana, Punjab

English Summary: Health Calendar: World Snake Awareness Day, Know about the Dangerous snakes and guidance for snake bite awareness Published on: 20 September 2019, 08:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.