1. செய்திகள்

கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்?

KJ Staff
KJ Staff
Theme of our Ponga

தமிழர்களின் தலையாய கொண்டாட்டங்களுள் ஒன்று, பொங்கல் திருநாள். பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான பொங்கலன்று, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து கதிரவனுக்கு படைத்து நன்றி நவில்கின்றனர். தன்னுடைய வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி உழவு செய்து, பாடுபட்டு விவைவித்து, விளைந்த பயிர்களை அறுவடை செய்து, களம் சேர்த்து, போர் அடித்து, புதுநெல் வீடு வந்து சேரும் அறுவடை திருநாள் தான் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் வழிபாடு

விவசாயம் செழிக்க உதவிய கதிரவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் பெரும்பொங்கலுக்கு அடுத்த நாள் தன்னோடு காட்டிலும் களத்து மேட்டிலும் பாடுபட்ட காளை மாடுகளுக்கும், பட்டியிலிருந்து குடும்பத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்த பசுக்களுக்கும் பொங்கலிட்டு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல் நாள் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.

மரபின் நீட்சி

விவசாயம் இயந்திரமயமாகிவிட்ட சூழலிலும்,  நகரமயமாக்கலின் விளைவாக பல பகுதிகளில் கால்நடைகள் இல்லாமல் போய்விட்ட சூழலிலும், நகர்புறங்களில் குக்கரில் பொங்கலிட்டு விசில் சத்தம் கேட்கும் போது பொங்கலோ பொங்கல் என பொங்கலிட்டு மகிழ்கின்ற நகரவாசிகளுக்கு மத்தியிலும் கொண்டாடப்படும் இந்த கால்நடைகளுக்கான மாட்டுப்பொங்கல் தமிழர்களின் மரபு காலங்கள் கடந்தும் நீட்டிப்பது அதிசயத்தக்க அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகிலேயே இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் தனித்தனியே பண்டிகை எடுத்துக் கொண்டாடும் தனிச்சிறப்பு தமிழர்களுக்கும் அவர்தம் மரபிற்கும் மட்டும்தான் உள்ளது.

Mattu pongal and worship

மாட்டு பொங்கல்

இந்நாளில் மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, கயிறு மாற்றி, கொம்பு சீவி, வண்ணம் பூசி, மாலை அணிவித்து, சலங்கை பூட்டி, பொங்கலிட்டு ஊட்டி மகிழ்கின்றனர், தமிழர்கள்.

பண்டிகைகளுக்காக மகிழ்ந்திருக்க வேண்டிய நாம் இதுபோன்று அலங்காரம் செய்யும் பொழுது சில அசம்பாவிதங்கள் நேர்ந்து விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

விழிப்போடு இருப்போம்

மாடுகளை குளிப்பாட்டி வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கும் பொழுது எரிச்சல் தரக்கூடிய அல்லது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். கூரிய பொருட்களை கொண்டு அலங்கரிக்க கூடாது. கழுத்தை இருக்கும் படியாக கயிறு மற்றும் சலங்கைகளை கட்ட கூடாது. எல்லாவற்றையும் விட முக்கியமாக அதிக அளவில் பொங்கல் ஊட்டக்கூடாது. சிறிதளவு பொங்கல் கொடுக்கலாம்.

அமில நிலையின் பாதிப்புகள்

மாடுகள் அசை போடும் பிராணிகளுள் ஒன்று. மனிதர்கள் சாப்பிட உகந்த மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் இந்த அசைபோடும் பிராணிகளுக்கு கொடுப்பதால் வயிற்றின் அமில காரத் தன்மை பாதிக்கப்படுகிறது. அரிசி, கம்பு, சோளம்  போன்ற தானிய வகைகளில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. அரிசி சோறு, பச்சரிசி பொங்கல் போன்றவற்றை ஆடு மாடுகளுக்கு வழங்குவதால்  அமில-கார சமநிலை பாதிப்படைகிறது. இதனால் அமில நோய்(Acidosis) ஏற்படும். அதிக அளவு பொங்கல் கொடுப்பதால் சில மாடுகள் இறந்து விட கூடியளவு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தவிர்க்க வேண்டியவை

கால்நடைகளுக்கு அரிசி சோறு, பொங்கல் போன்றவை மட்டுமல்லாமல் கஞ்சி, சத்துணவு மாவு, உணவகங்கள், சுப துக்க நிகழ்வுகளில் மீதமாகும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கால்நடைகளுக்கு கொடுப்பதால் தீவன செலவு குறைந்து உற்பத்தி பெருகும் என நினைக்கிறோம். ஆனால், கால்நடைகள் அமில நோயால் (Acidosis) பாதிப்படைந்து இறக்கவும் நேரிடும். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு ஒன்றிரண்டு மாடுகளை வைத்து பிழைக்கும் பல்வேறு குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விடுகின்றனர்.

விழிப்போடு இருப்போம், அளவாக பொங்கல் ஊட்டுவோம். கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத பொங்கல் கொண்டாடி மகிழ்வோம்.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

English Summary: Pongal 2020: Significance, Celebrations, Traditions and Worship of Cattle Published on: 16 January 2020, 01:09 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.