1. விவசாய தகவல்கள்

பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியம் - புதியத் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Agricultural implements at subsidized prices to farmers

தமிழகத்தின் கிராமங்களில் பயறு வகைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடி (Crop cultivation)

சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு, பயறுவகைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி  முதல் பயறுவகைப் பயிர்களின் சாகுபடியினை தீவிரப்படுத்தும் திட்டத்தை துவங்குவதற்கு தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் எடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நமது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாகத் தேவைப்படும் புரதச் சத்துத் தேவையை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை பயறு வகைகள்.
இவை வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தினை (நைட்ரஜன் சத்து) மண்ணில் நிலைநிறுத்தி, நமது நிலத்தின் வளத்தையும் அதிகரிக்கிறது.

60 நாள் பயிர் (60 day crop)

இத்தகையப் பயறுவகைப் பயிர்கள் குறைவான நீரில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவை. பெரும்பாலும் வறண்ட நில பரப்புகளிலேயே அதிகம் விளையக்கூடியவை. 60 நாட்களில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய பயிர் என்றால், அது பயறுவகைகள்தான். நெல் போன்ற பயிர்களுக்கு அதிக ரசாயன உரங்கள் (யூரியா, டிஏபி) எடுத்துக்கொள்வதால் மண்ணின் வளத்தை பாதிக்கின்றது.

மண்ணின் வளம் (Soil fertility)

ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்தால், மண்ணின் வளம் மேம்படும். மனிதனின் புரதத்தேவைக்கு உற்பத்தி, மண்வளம் உயர்வு, குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்றவையே பயறுவகைப் பயிர்களின் முக்கியத்துவம்.
குறிப்பாக சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, நெல்வயலில் இருக்கும் ஈரப்பதத்தினை பயன்படுத்தியும், பாசன வசதி உள்ள இடங்களில் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்து தமிழ்நாட்டில் பயறு வகை உற்பத்தியினை உயர்த்துவதற்கு அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கிராமங்களில் முகாம் (Camp in the villages)

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமங்களில் சம்பா நெல் அறுவடைக்குப்பின் நெல் தரிசாக உளுந்து அல்லது பாசிப்பயறு சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து விளக்கப்பட உள்ளது. அந்த வகையில், கிராம வாரியாக தீவிர முகாம்கள் நடத்துவதற்கு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கிராம வாரியாக விவசாயிகளை அடையாளம் கண்டு, சம்பா நெல் அறுவடைக்குப்பின் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நெல் தரிசாக உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளை சாகுபடி செய்வதற்கு தேவையான உயர் மகசூல் ரக விதைகளைப் போதுமான அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைக்குமாறு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் மேய்ச்சல்

பொதுவாக சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, விவசாயிகள் வயல்களில் கால்நடைகளை மேயவிடுவது உண்டு.நடப்பாண்டில், நெல் தரிசாக பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ள கிராமங்களில் சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, கால்நடைகளை மேயவிடாமல் பயறுவகைப் பயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்காக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய யுத்திகள் குறித்தும் துறை அலுவலர்கள் விளக்க உள்ளார்கள்.

மானியத்தில் வேளாண் கருவிகள் (Agricultural implements on subsidy)

சம்பா நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில், சான்றுவிதை உற்பத்தி மற்றும் விநியோகம், உற்பத்தியை உயர்த்தும் இடுபொருட்களான உயிர்உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை, ஜிப்சம், பயிர்பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான் போன்ற வேளாண் கருவிகள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள், தார்பாய்கள் போன்ற பல்வேறு இடுபொருட்கள் அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

செயல்விளக்கம் (Process)

நெல்தரிசாக பயறு வகைகள் அதிகம் சாகுபடி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் இதற்கென சிறப்பு செயல்விளக்கம் விவசாயிகளின் வயல்களிலேயே நடத்தப்படும்.

இத்தகைய செயல்விளக்கங்களில், தரமான விதை, விதை நேர்த்தி, பயிர் எண்ணிக்கை பராமரிப்பது, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவையினை பயன்படுத்துவது, பூக்கும் தருணத்தில் உரக்கரைசல் கொண்டு பயறு செடிகளின் மேல் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் விளக்கமாக எடுத்துரைப்பார்கள்.

அதிக வருமானம் (Higher income)

அறுவடை செய்த உளுந்து மற்றும் பாசிப்பயறை நன்கு சுத்தப்படுத்தி, தரம்பிரித்து, பருப்பாக உடைத்து கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்தால், பயறு விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

எனவே, விவசாயக் குழுக்கள் மூலம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள 138 பயறு உடைக்கும் இயந்திரங்களுடன், நடப்பாண்டில், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 50 சதவிகித மானியத்துடன் குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வீதம் 89 இடங்களில் மதிப்புக்கூட்டு மையங்கள் துவங்க விவசாயிகள் குழுக்களுக்கு நிதிஉதவி வழங்கப்படும்.

40 சதவிகித மானியம் (40 percent subsidy)

தனிப்பட்ட விவசாயிகள் மூலமாக பயறு உடைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் நிறுவுவதற்கு 40 சதவிகித மானியம் வழங்கப்படும்

அறுவடைக்குப்பின் விவசாயிகளிடமிருந்து உளுந்து மற்றும் பாசிப்பயறை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அதாவது உளுந்து கிலோவுக்கு ரூ.63க்கும், பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.72.75க்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசின் இத்தகைய திட்டப்பலன்களை நன்கு பயன்படுத்தி, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பயறுவகை பயிர்களை அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்து பயன் அடையுமாறு விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
வேளாண்மை உற்பத்தி ஆணையர்

மேலும் படிக்க...

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை!

உடல் ஆரோக்கியமே முக்கியம்- ஈஷா வழங்கும் புத்தாண்டுப் பரிசு!

English Summary: 40% subsidy for cultivation of crop varieties - New scheme! Published on: 01 January 2022, 10:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.