1. விவசாய தகவல்கள்

மண்ணின் வளத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளே சாட்சி!

R. Balakrishnan
R. Balakrishnan
Butterflies testify to soil fertility!

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், ரசாயன பயன்பாடின்றி இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில், மண்ணின் வளம் ஆரோக்கியமாக இருக்கிறது. அங்கு வட்டமிட்டு பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளே இதற்கு சாட்சி என்கின்றனர், வனத்துறையினர். வண்ணத்துப்பூச்சிகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு வண்ணத்துப்பூச்சிகள் நம்முடன் பழக்கப்பட்டது. பார்க்கும் போதெல்லாம் நமக்கு வியப்பளிக்கின்ற அழகில் கண்ணைக்கவர்ந்து மயக்குகின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் (Butterflies)

குழந்தைகளுக்கு வண்ணத்துப்பூச்சிகள் என்றால் அலாதி பிரியம், காற்றில் மிதந்து பறக்கும் அவற்றை பிடிக்க முயன்று விளையாடி மகிழ்வர். பல நிறங்களில் உள்ள வண்ணத்துப்பூச்சிகள், விவசாயத்துக்கு அடிப்படையாகவும், விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளன. தோட்டத்திலுள்ள பூக்களில் மதுரம் உறிஞ்சி குடித்து, தோட்டம் முழுவதும் பரவி மகரந்த சேர்க்கையை அதிகரிக்கச் செய்கிறது. இப்படிப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளை நாம் சில ஆண்டுகளுக்கு முன், தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் கூட எளிதாக காண முடிந்தது.

ஆனால், தற்போது விவசாய முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், அதீத ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரப்பயன்பாடு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், வண்ணத்துப்பூச்சிகள் அருகிவருகின்றன. இரசாயனத்தின் வீரியத்தால், வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமின்றி, விவசாயத்துக்கு உதவும் தட்டான்பூச்சிகள், தேனீக்கள் என பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன.

இயற்கை பூச்சிக்கொல்லிகள் (Natural Pesticides)

இதன் காரணமாக, தற்போது குடியிருப்பு பகுதிகளில் சொற்பமான அளவில் மட்டுமே வண்ணத்துப்பூச்சிகளை காண முடிகிறது. அதிக ரசாயனம் பயன்படுத்தாத இயற்கை சூழல் பாதிக்காத விளைநிலங்கள், வனத்தில் மட்டுமே அதிகம் உள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்து பயன்படுத்துகின்றனர்.

அந்த தோப்புகளில், அதிகப்படியான வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்களை காண முடிகிறது. தற்போது, மரகத அழகி, நாட்டு நீல அழகி, புளு மூன் வண்ணத்துப்பூச்சி, கருநீலவண்ணன், கறிவேப்பிலை அழகன் மற்றும் கனிச்சிறகன் உள்பட பலவகை வண்ணத்துப்பூச்சிகள் அப்பகுதியில் பெருகியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் கூறியதாவது: அதீத ரசாயனம், உலக வெப்பமயமாதல் என பல காரணங்களால், வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை செயல்பாடுகளான மதுரம் தேடுதல், பறத்தல் உள்ளிட்டவற்றில் தடை ஏற்படுவதுடன், இனப்பெருக்கம் பாதித்து அழிந்து வருகின்றன.

வண்ணத்துப்பூச்சிகளில் அழிவு (Loss of Butterflies)

இயற்கைச்சமநிலை அழிந்து வருவதற்கான சாட்சி. ரசாயன பயன்பாட்டை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். வீடுகளில், விளைநிலங்களில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான பூக்கள் வளர்க்க வேண்டும். இதன் வாயிலாக அவற்றை காக்க முடியும். எங்கு அதிக அளவில் வண்ணத்துப்பூச்சியை காண முடிகிறதோ, அந்தப்பகுதி இயற்கை மாசுபடாமல் ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?

வீட்டின் வெப்பத்தை குறைக்க பசுமைச் சுவரை உருவாக்குவோம்!

English Summary: Butterflies testify to soil fertility! Published on: 02 May 2022, 08:16 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.