1. விவசாய தகவல்கள்

பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

KJ Staff
KJ Staff
proper precautions

தமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன.

‘பூச்சிக்கொல்லிகளை தேவைப்படும் அளவு மட்டுமே வாங்க வேண்டும். உடைந்த, ஒழுகிய, காலாவதியான, மூடி திறந்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை வாங்கக் கூடாது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள், ஆறு, குளங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி பூச்சிக்கொல்லி டப்பாக்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால், நீர்நிலைகளில் இந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.

பூச்சிக்கொல்லி பாட்டில் லேபிளில் எச்சரிக்கை, ஆபத்து, விஷம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். விஷம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பெரும் ஊறு விளைவிப்பவை. இந்த வகையான பூச்சிக்கொல்லிகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவை அதிக நச்சுத்தன்மை, சுமாரான நச்சுத்தன்மை, மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.

பூச்சிக்கொல்லி தெளிப்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். பூச்சிக்கொல்லி தெளிக்கப் பயிற்சி பெற்ற ஆட்களையே பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும் தெளிப்பான்களைப் பரிசோதனைசெய்து கசிவுகள் இருந்தால் சரிசெய்துகொள்ள வேண்டும்.

Precautions

தெளிக்கும் முறை

பூச்சிக்கொல்லி தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உடலிலோ, கைகளிலோ பூச்சிக்கொல்லி பட்டுவிட்டால் உடனே சுத்தம் செய்துகொள்ள முடியும்.

குழந்தைகள், முதியவர்கள், கருவுற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பூச்சிக்கொல்லிகளை கையாளக்கூடாது. பூச்சிக்கொல்லி தெளிப்பவர் பாதுகாப்பான உடைகளான முழுநீளச் சட்டை, நீண்ட கால்சட்டை, கால்களுக்கு தரமான பூட்ஸ் காலணிகள், தலைக்குத் தொப்பி அல்லது முண்டாசு, கண்களுக்கு வெள்ளைநிற கண்ணாடி, கைகளுக்கு பாதுகாப்பு ரப்பர் உறைகளையும், வாய்க்கு அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் முக மூடிகளையும் பயன்படுத்த வேண்டும்.

பூச்சிக்கொல்லி அடித்து முடித்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்ள வணே்டும். கழற்றிய ஆடைகளை சலவை செய்யாமல் மறுபடியும் உடுத்தக் கூடாது. இந்த ஆடைகளை அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளுடன் சேர்த்து சலவை செய்யக் கூடாது. பூச்சிக்கொல்லி தெளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ, புகைப்பிடிப்பதோ கூடாது.

எப்பொழுதுமே பூச்சிக்கொல்லியைக் கலக்கும்பொழுது காற்று வீசும் திசையில் நின்றே கலக்க வேண்டும். கொள்கலனை முகர்ந்து பார்க்கக் கூடாது. காலை, மாலை வேளைகளில் மட்டுமே பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.

Pesticides Spraying Preacaution

கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவை

அருகில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும் பயிர்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் அவற்றுக்கு பூச்சிக்கொல்லி சென்று சேராத வண்ணம் கவனத்துடன் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிப்பவர் உடலில் காயங்கள், புண்கள் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும். தனி ஆளாக பூச்சிக்கொல்லியை அடிக்கக்கூடாது. எப்பொழுதும் ஒருவர் உடன் இருப்பது நல்லது.

பாதுகாப்பான, காற்றோட்டமான, உலர்ந்த, ஈரப்பதமில்லாத அறையில் குழந்தைகள், மற்றவர்கள் அணுகமுடியாத வகையில் பூச்சிக்கொல்லிகளை பூட்டி வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை சமையலறையில் வைக்கக் கூடாது. நேரடியாக சூரியஒளி, மழை படும் இடங்களிலும், நெருப்புக்கு அருகிலும் வைக்கக் கூடாது. பூச்சிக்கொல்லி அடிக்கும் வேலை முடிந்த அன்றே பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளில், பூச்சிக்கொல்லி கலன்களில் உள்ள பூச்சிக்கொல்லியைக் காலி செய்துவிட்டு சுத்தம்செய்து வைக்க வேண்டும்.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Some precautions during spraying of Pesticides Published on: 15 December 2018, 11:58 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.