1. விவசாய தகவல்கள்

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள்: தேசிய விருது வாங்கிய விருதுநகர் விவசாயி!

R. Balakrishnan
R. Balakrishnan
Small garins Value Added Products

சிறுதானியங்களைக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரித்து வரும் விருதுநகரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் வழங்கும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறுதானிய ஆண்டு (Small Grains Year)

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி, இயற்கை விவசாயம் மூலம் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதோடு அதில் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகிறார்.

சிறுதானியங்கள் மூலம் முளைகட்டி தயாரிக்கப்படும் சத்துமாவுடன் பருப்பு வகைகள், மூலிகைகள், ஸ்பைருலினா போன்றவற்றை கலந்து மதிப்புக் கூட்டப்பட்ட ரொட்டி வகைகள், தனி அவல், அவல் மிக்சர், சிறுதானிய கூழ், சிறுதானிய லட்டு போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். அதோடு, சாமை சைவ பிரியாணி, வரகு புளியோதரை, பனிவரகு, எலுமிச்சை சாதம், தினை தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் போன்ற உணவு வகைகளை தயாரித்து தனியார் மற்றும் அரசு விழாக்களுக்கு வழங்கி வருகிறார்.

தேசிய விருது (National Award)

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், தாதம்பட்டி சிவக்குமாருக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான புத்தாக்க விருதை அறிவித்தது. தமிழகத்தில் சிவக்குமார் ஒருவருக்கு மட்டுமே இவ்விருது அறிவிக்கப்பட்டது. மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற "புஷா கிரிஷி விக்யான் மேளா"வில் பங்கேற்க சிவக்குமாருக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்தது. இவ்விழாவின் நிறைவு நாளான மார்ச் 4 ஆம் தேதி விவசாயி சிவக்குமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

விவசாயி சிவக்குமார் கூறியபோது,

''சிறுதானியங்களை இளைய தலைமையினர் மறந்து வருகின்றனர். துரித உணவுகளையே விரும்புகிறார்கள். இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணும் வகையில் சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பல குக்கீஸ் மற்றும் ஸ்னாக்ஸ், வெற்றிலை ஜூஸ் போன்றவற்றை தயாரித்து வழங்குகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலர் தங்களது இல்ல விழாக்களுக்கு சிறுதானிய உணவு வகைகளை தயார்செய்து கொடுக்க ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். அரசு விழாக்களுக்கும் சிறுதானிய உணவு தயாரித்து கொடுக்கிறோம். 

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ததில் தமிழக அளவில் நான் மட்டும் விருதுக்கு தேர்வாகி இருக்கிறேன். இது பெருமையாக உள்ளது'' என தெரிவித்தார்.

மேலும் படிக்க

மதுரை விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் நெல் கொள்முதல் மையங்கள்: கண்டு கொள்ளாத அரசு!

PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: Value Added Products in Small Grains: Virudhunagar Farmer Wins National Award! Published on: 05 March 2023, 08:03 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.