1. செய்திகள்

கஜா புயல் - கடும் பாதிப்பு

KJ Staff
KJ Staff

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. புயலால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூறையாடிய கஜா: கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.20 மணி முதல் 2.30 மணி வரைக்குள் நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே சுமார் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தீவிர புயலாகக் கரையைக் கடந்தது. அதைத் தொடர்ந்து, அது புயலாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி தமிழகத்தின் உள்மாவட்டங்களான திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கேரளாவில் மையம் கொண்டிருந்த இது அரபிக் கடலை நோக்கி நகர்கிறது.

பாதுகாப்பு மையங்களில் 81,948 பேர் தங்கவைப்பு: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைப் புயல் தாக்குவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 109 முகாம்களில் 13 ஆயிரத்து 600 பேர், நாகப்பட்டினத்தில் 102 முகாம்களில் 44 ஆயிரத்து 87 பேர், ராமநாதபுரத்தில் 17 முகாம்களில் ஆயிரத்து 939 பேர், தஞ்சாவூரில் 58 முகாம்களில் 7 ஆயிரத்து 43 பேர், புதுக்கோட்டையில் 25 முகாம்களில் 2 ஆயிரத்து 432 பேர், திருவாரூரில் 160 முகாம்களில் 12 ஆயிரத்து 847 பேரும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் 13 ஆயிரத்து 229 பேர் குழந்தைகள். ஒட்டுமொத்தமாக கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் 417 மையங்களில் 81 ஆயிரத்து 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் கடும் பாதிப்பு: வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 11 முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, வேதாரண்யத்தின் வடமேற்கு திசையிலிருந்து சுமார் 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியது. 
ஒரு சில நிமிடங்கள் ஓய்ந்த காற்றின் சீற்றம், அடுத்த சில நிமிடங்களில் வேதாரண்யத்தின் தென்கிழக்குத் திசையிலிருந்து மணிக்கு சுமார் 130 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்றாக வீசத் தொடங்கியது. இரவு சுமார் 1.30 மணியிலிருந்து வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளின் தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததன் காரணமாக, வேதாரண்யத்துக்கான சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 
வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை விடியலின்போது விலகிய கஜா புயலின் கோரத் தாண்டவம், நாகை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால உழைப்பில் உருவான பல கோடி ரூபாய் மதிப்பிலான உடமைகளை நிர்மூலமாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரையிலான கணக்கெடுப்புப்படி, மாவட்டத்தில் 11,512 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், 2,900 மீன்பிடி ஃபைபர் படகுகள் பகுதியளவிலும், 350 படகுகள் முழுமையாகவும், 125 விசைப் படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 11 கால்நடைகள் இறந்துள்ளன. 

9 பேர் உயிரிழப்பு...: மாவட்ட நிர்வாகத்தின் முதல்கட்ட கணக்கெடுப்புப்படி, திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 5 பேரும், வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் மொத்தம் 9 பேர் கஜா புயல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நாகை மாவட்டத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது. 

திருவாரூரில்...: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் வீடு இடிந்தும், மரம் முறிந்து விழுந்ததிலும் 12 பேர் உயிரிழந்தனர். இந்த மாவட்டத்திலும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. குடிசைகள் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

தஞ்சாவூரில்....: தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலால் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

English Summary: Cyclone Gaja- Disaster management

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.