1. செய்திகள்

தேர்தல் களம் : அதிமுக கூட்டணி வெற்றி பெற ஒத்துழையுங்கள்! - இபிஎஸ் - ஓபிஎஸ் வேண்டுகோள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையு உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அதிமுக கூட்டணி வெற்றி பெற ஒத்துழைக்குமாறு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் ,முதல் அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சாதாரண தொண்டர்களாக இருந்த எங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளை எங்களுக்கு வழங்கி, அளிக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் நாங்கள் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளோம். தொண்டர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். அதனால் தான், இன்றும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அரசு அறிவித்த மக்கள் நலத் திட்டங்களினால், அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்குக் கிடைத்த இந்த நல்வாய்ப்பினை சிறிதும் குறைவின்றி, எங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம்.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தி.மு.க-வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்ற போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்றது. அந்தப் போராட்டங்களை எல்லாம் சமாதானமான முறையில் பேசி, அதற்கு தீர்வு கண்டு, வெற்றிகண்டுள்ளது அரசு.

தி.மு.க-வில் தொடர்ந்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தான் நடந்து வருகிறது. ஆனால், அதிமுகவில் அதுபோன்ற நிலை இல்லை. கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கும் பதவிக்கும் வரமுடியும். ஆனால் இது போன்ற நிலை தி.மு.க-வில் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; அராஜக ஆட்சி துவங்கும்; குடும்ப ஆட்சி தலைதூக்கும்; தமிழகம் அமளிக்காடாகத் திகழும்; கட்டப் பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது; நிர்வாகச் சீர்கேடு ஏற்படும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும்.

எனவே, தமிழ் நாட்டு மக்கள் அமைதியான, ஜாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும், நிம்மதியுடனும் வளமான வாழ்வு வாழ, வழி செய்யும் வகையில் 2021 ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை கருத்தில்கொண்டு தான் கீழ்க்கண்டவாறு தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.

  • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்.

  • பெண்களின் பணிச் சுமையைக் குறைக்க விலையில்லா `அம்மா வாஷிங் மெஷின்.

  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ. 1,500 உதவித் தொகை.

  • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரிய சக்தி அடுப்பு.

  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.

  • ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகம்.

  • மகப்பேறு நிதியுதவி ரூ. 18,000/-லிருந்து, ரூ. 21,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு.

  • தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ. 50,000/-லிருந்து ரூ. 60,000/- ஆக உயர்வு.

  • தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைரூ. 25,000/-லிருந்து ரூ. 35,000/-ஆக உயர்த்தப்படும்.

  • நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச் சலுகை.

  • அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்.

  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வைப்பு நிதி ரூ. 50,000/-லிருந்து ரூ. 70,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.

  • விவசாய மின் இணைப்பிற்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடி மின் இணைப்பு வழங்கப்படும்.

  • விவசாய பம்புசெட்டுகளுக்கு ஏப்ரல் முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது.

  • முக்கிய விளை பொருட்களுக்கு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

  • விவசாயிகளின் நலன் கருதி நெல் மற்றும் கரும்புக்கு ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

  • சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளுக்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

  • விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.

  • கரிசல் மண், களி மண் தடையின்றி எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்படும்.

  • வாழை விவசாயிகளின் வாழ்வு சிறக்க, வாழையிலிருந்து நூல் எடுத்து ஆடை செய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்.

  • அரசுப் பணியில் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

  • ரூ. 25,000 மானியம் விலையில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • 18 வயதான அனைவருக்கும் கட்டணமில்லாமல் இருசக்கர வாகனப் பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

  • தனியார் துறை தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத் தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்.

  • கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

  • இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள மானியம் ரூ. 6 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்தப்படும்.

  • ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

  • கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலன் காக்க நலவாரியம் அமைக்கப்படும்.

  • சிறுபான்மையின மக்களுக்கு இலவசமாக மயான இடம் வழங்கப்படும்.

  • மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 5,000லிருந்து ரூ. 7,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • விபத்தில் மீனவர்கள் இறக்க நேரிட்டால் தமிழ் நாடு மீனவ நலவாரிய நிதியிலிருந்து வழங்கப்படும் நிதியுதவி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

  • சென்னையில் உலகத்தரம் வாய்ந்த மொத்த மீன் விற்பனை சந்தை ஏற்படுத்தப்படும்.

  • தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

  • தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் ரூ. 6000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

  • அம்மா பசுமை வீடு திட்ட மானிய தொகை ரூ. 2,43,000/-லிருந்து ரூ. 3,40,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் ரூ. 1,000-லிருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 1,500லிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீட்டு முறை செயல்படுத்தப்படும்.

  • பொதுமக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க, ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் 2 கொசுவலை வழங்கப்படும்.

  • தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் நிர்ணயம் செய்யும்.

  • உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்கப்படும்.

  • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தப்படும்.

எனவே, தேர்தல் நேரத்தில், மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதால், வருகின்ற 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் பேராதரவினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

English Summary: EPS - OPS request Tamilnadu people to caste vote for Admk to win in the Election 2021 Published on: 03 April 2021, 02:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.