1. செய்திகள்

இ-நாம் திட்டத்தினை சரியா யூஸ் பண்ணுங்க- விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
farmers to use e-NAM scheme says Coimbatore collector

இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தும், இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்பான அறிவிப்பினையும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ளார்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM) செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இநாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, கோயம்புத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர், மலையடிப்பாளையம், நெகமம் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 9 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இநாம் முறையில் நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் ஏல இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பிற மாவட்டம், பிற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்று ஏலம் கோர முடியும் என்பதுடன் துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்றது.

தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவாக்கப்பட்டு வருகின்றது. மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் (FARM GATE SALES) என்ற முறை அரசால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைத்திடும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம் / தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று, இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருவதுடன், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஆகஸ்ட்  மாதத்திற்கான உற்பத்தி குழுகூட்டம் காலை 09.30 மணியளவிலும் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்டஆட்சித்தலைவரால் (25/08/2023) வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக நடத்தப்பட உள்ளது.

இதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தளகூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சித் தலைவர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

சேலம் மாவட்ட அங்கக விவசாயிகளின் கவனத்திற்கு!

மரவள்ளி பூஸ்டர்- TNAU பருத்தி பிளஸ் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

English Summary: farmers to use e-NAM scheme says Coimbatore collector Published on: 22 August 2023, 09:19 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.