1. செய்திகள்

குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் குறைப்பு- முதல்வர் அதிரடி அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MK stalin

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் இன்று நடைப்பெற்ற (18.10.2023) ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் 2 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மற்றும் புகாரினை கேட்டு வருகிறார். அந்தவகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைப்பெறும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த முதல்வர் மின் கட்டண சலுகை, சுங்க சாவடி கட்டணம் நிறுத்தி வைப்பு தொடர்பான அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வர் தெரிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு-

சுங்க கட்டணம் நிறுத்தி வைப்பு:

”தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன், இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது.

இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் “ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண சலுகை:

இரண்டாவதாக,” சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியம், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதையும் காண்க:

தீபாவளி போனஸ் இவர்களுக்கு மட்டும் தான்- மத்திய அரசு அறிவிப்பு

நகைப் பிரியர்களின் கனவில் இடி- கண்மூடித்தனமாக ஏறியது தங்கத்தின் விலை

English Summary: MKstalin made 2 new announcements including concessions in electricity bill Published on: 18 October 2023, 02:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.