1. செய்திகள்

3 மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக புதிய சேமிப்புக் கிடங்கு திறப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
new storage warehouse for 3 district farmers in TN

நேற்றைய தினம் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 3 கிடங்குகளை திறந்து வைத்தும், மேலும் கட்டப்படவுள்ள 2 புதிய கிடங்குகளுக்கு காணொளி வாயிலாக அடிக்கல்லும் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, இராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர். அதைப்போல் திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், அறிவியல் முறையில் சிறந்த கட்டுமானத்தை ஏற்படுத்தி வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவினைப் பாதுகாத்திடும் பொருட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முறையே 50 விழுக்காடு பங்கு கொண்ட இரு பங்குதாரர்கள் ஆவர்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 60 இடங்களில் 269 கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனக் கிடங்குகளில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் விவசாய விளைபொருட்கள், விதைகள், உரங்கள் சேமித்து வைக்கப்பட்டு அதற்கான ரசீது (Warehouse Receipt) வழங்கப்படுகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சேமிக்கப்படும் பொருட்களையும் இருப்பில் வைத்து செயல்பட்டு வருகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் காலியாகவுள்ள இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு, என மொத்தம் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டம் - பல்லடம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம்- குனிச்சி ஆகிய இடங்களில் மொத்தம் 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 2 சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இஆப உட்பட அரசு உயர் அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

மேலும் காண்க:

பாரம்பரிய காய்கறி விதை மீட்டெடுக்கும் விவசாயிகளா நீங்கள்?

ஊக்கத்தொகையுடன் 45 நாள் நெசவு பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு

English Summary: new storage warehouse for 3 district farmers in TN Published on: 09 September 2023, 12:13 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.