1. செய்திகள்

50,000 பள்ளி ஆசிரியர்களை உடனே நியமிக்க கோரிக்கை- அன்புமணி ராமதாஸ்

T. Vigneshwaran
T. Vigneshwaran
School teachers

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும். இத்தகைய பள்ளிகளின் மாணவர்களால் கடினமான மேல்நிலை மற்றும் உயர்கல்வியையும், போட்டித் தேர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 4,863 ஆசிரியர் பணியிடங்கள் கடந்த ஆண்டு நிலவரப்படி காலியாக உள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் தொடக்கப் பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக 4,500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் கூடுதலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த வகையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வளவு ஆசிரியர்களை நியமித்தால் கூட அரசு அனுமதித்த பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள்.

அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது மட்டும் தான் அரசின் நோக்கமாகவும், இலக்காகவும் இருக்கிறதே தவிர, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படைத் தேவையை நிறைவேற்ற அரசு முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக பாடத்திட்டங்களும், பாட நூல்களும் உள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும்.

இதைக் கூட செய்யாமல் 5 வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர், மூன்று வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவோம் என்பதெல்லாம் பயனற்ற முழக்கமாகவே இருக்கும். ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கும்.

மேலும் படிக்க

இயற்கை முறையில் கால்நடை தீவனம் தயாரித்து அசத்தும் பட்டதாரி பெண்மணி

English Summary: Request for immediate appointment of 50,000 school teachers - Anbumani Ramadas Published on: 14 June 2022, 07:44 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.