1. செய்திகள்

தென்னை விவசாயிகளை அச்சுறுத்தும் தென்னை வேர் வாடல் நோய் - வேளாண் குழு நேரடி கள ஆய்வு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நமது மாநிலத்தில் தென்னைக்கு பெயர் போன பொள்ளாச்சி தாலுக்காவிலிருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதோடு மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பிவருவது யாவரும் அறிந்ததே. தற்போது இப்பகுதியிலுள்ள தென்னை மரங்களை மிகவும் கொடிய நோயான வேர் வாடல் நோய்’ தாக்கி விளைச்சலையும் மற்றும் மரங்களையும் பாதித்து வருவது பொள்ளாச்சி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் குழு கள ஆய்வு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிக்காட்டுதலின்படி, பயிர் நோயியல் துறையைச் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தாலுக்காவில் தென்னை வேர்வாடல் நோயின் தோற்றம் மற்றும் பரவுதலை கண்டறிவதற்கான தீவிர கள ஆய்வுனை மேற்கொண்டது. மேற்கொண்ட ஆய்வின் மூலம், தென்னையில் வேர்வாடல் நோயானது மிக பரவலாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளதை கண்டறியப்பட்டது.

தென்னை மரங்களில் 65.82% நோய் தாக்குதல்

பொள்ளாச்சி தாலுக்காவிலுள்ள 32 கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழக பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் அடங்கிய குழு விரிவாக ஆய்வு செய்தனர். இவ்வாய்வின் முடிவாக நோய் பாதிப்பானது 0 முதல் 65.82 சதவீதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெருவாரியான கிராமங்களில் 20 சதவீதத்திற்கும் குறையாமல் இந்நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக மகசூல் இழப்பு அபயாம்

பொதுவாக, இலை மட்டைகள் கீழ்நோக்கி வளைந்து விலா எலும்பு போலகாணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாகவும் மற்றும் ஓரங்கள் கருகுவதும் இந்நோயின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இதனால் இலைகளின் எண்ணிக்கை குறைந்து, குட்டையாகவும் மற்றும் மெலிந்தும் விடுகிறது. மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல் இந்நோயின் மற்ற அறிகுறிகளாகும். நோயின் தன்மையை பொறுத்து வேர்அழுகல் 12 முதல் 90 சதவிகிதம் வரை காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரங்களில் பூங்கொத்து மலர்தல் மிக தாமதமாகும். பாளை சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், பாளை வெடிக்காமல் கருகியும், பூங்காம்புகளில் நுனியிலிருந்து கருகுதலும் காணப்படும். இந்நோயால் குரும்பை அதிகமாக உதிர்ந்தும் தரமற்ற சிறிய காய்களை உருவாக்கியும் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது,

சாறு உறிஞ்சும் பூச்சிகளே காரணம்

இந்நோய் காரணி பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி ஆகும். இந்த பைட்டோபிளாஸ்மா சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கைப்பூச்சிகளின் மூலமாக ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு பரவுகின்றது. பொதுவாக இந்நோயுடன் இலை அழுகல் நோய், வேர்வாடல் நோய்கள் சேர்ந்தே காணப்படும். முதலில் நடுக்குருத்துப் பகுதிகளில் சாம்பல்நிறப் புள்ளிகள் தோன்றி பின்பு இலைஅழுகல் ஏற்படும். சில தருணங்களில் இந்நோய் பாதிக்குள்ளான மரங்களில் மற்ற பூச்சி தாக்குதல் காணப்படும்.

இந்நோயினை கீழ்வரும் ஒருங்கிணைந்ந மேலாண்மை முறைகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

  • குறைந்த அளவு (அல்லது) ஆரம்ப நிலையில் பாதிப்புக்கு உள்ளான தென்னை தோப்புப பகுதிகளில் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

  • பாதிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகளில், ஆண்டுக்கு 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும் நோய் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் மற்ற மரங்களுக்கு நோய் பரவுவதல் தடுக்கப்படுகிறது.

  • ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 50 கிலோ தொழு உரம், பேசில்லஸ் சப்டிலஸ் 100 கிராம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை இட வேண்டும்.

  • வட்டப்பாத்தியை தென்னை மட்டைகளைக் கொண்டு மூடாக்கு அமைக்கவேண்டும்.

  • ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை மேற்கொண்டும் நல்ல விளைச்சலை பெறலாம். உர மேலாண்மையில் ஒரு மரத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளான யூரியா - 1.3 கிலோ, சூப்பர்பாஸ்பேட் - 2 கிலோ, பொட்டாஷ் - 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் - 1 கிலோ என ஆண்டிற்கு இட வேண்டும்.

  • வட்டப்பாத்திகளில் பசுந்தாள் உரங்களான தட்டைப்யிறு, சணப்பை, கல்லகோனியம் மியூக்கனாய்ட்ஸ், பியூரேரியா ஜவானிக்கா மற்றும் தக்கைப்பூண்டு போன்றவற்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிரிட்டு பூக்கும் முன்னரே மடக்கி உழுதுவிட வேண்டும்.

  • தென்னையில் வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், ஜாதிக்காய் மற்றும் கருணைக்கிழங்கு போன்ற ஊடுபயிர் மற்றும் கலப்பு பயிரிடலாம்

    நோய்க்காரணியை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த போரேட் குருணை மருந்து 20 கிராமை 200 கிராம் மணலுடன்கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.

  • இந்நோயுடன் சேர்த்து வரும் இலை அழுகல் நோயைக்கட்டுப்படுத்த முற்றிலும் பாதிக்கபட்ட மட்டைகளை அகற்றி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அழுகிய பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் ஹெக்சகோனசோல் மருந்து 2 மில்லியை 300 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்றவும் அல்லது மேன்கோசெப் மருந்தை 0.3 என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

பழ மரங்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்! - வேளாண்துறை செயல் விளக்கப் பயிற்சி!!

மகசூலை அதிகரிக்க பயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி! 

மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

English Summary: Root Wilt Disease Attack Coconut Trees, Tnau professors visits and explained on controlled measures to pollachi farmers

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.