
Ration card holders
தமிழ்நாட்டில் புதிதாக 10.92 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து விரைவாக அட்டைகளை வழங்க உத்தரவிட்டிருந்தார். எனவே பலர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன.
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் மற்றும் கேள்வி நேரம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விவாதத்தில், தனி நபர் ரேஷன் அட்டை வழங்கப்படுமா என்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “யாரையும் சாராமல் தனியாக வாழும் நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 19 லட்சத்து 71 ஆயிரத்து 807 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன” என்றார்.
ரேஷன் கடைகளில் கைரேகை பொருந்தாமல் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது, அதனை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாட்டில் புதிதாக 10.92 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை வைப்பதை கட்டாயம் ஆக்காமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாயிண்ட் ஆஃப் சேல் கருவிகளின் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments