1. வெற்றிக் கதைகள்

பாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி

KJ Staff
KJ Staff

Bhuvaneshwari Madurai

விவசாயம் ஆண்களுக்கான தொழில் என்பதை மாற்றி, தற்போது பெண்களுக்கு இந்த துறையில் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒரு படி மேலாக மதுரை கருப்பாயூரணி ஒத்தவீட்டைச் சேர்ந்த செல்வம். இவரது மனைவி புவனேஷ்வரி என்பவர், இயற்கை விவசாயத்தில் வாடன் சம்பா, கிச்சலி, துளசி சீரக சம்பா, மற்றும் கருப்புகவுணி, போன்ற பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு கூடுதல் மகசூலை பெற்று மற்ற விவசாயிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியது, "எனக்கு தஞ்சாவூர் பக்கம் கல்யாண ஓடை. எங்கள் ஊர்தான் காவிரி ஆற்றின் கடைசி கடைமடை. எங்கள் குடும்பத்தில் 100 ஏக்கர் விவசாயம் செய்தோம். விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் தான் அப்பா எங்களை படிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயமே வேண்டாம் என்று அப்பா ஒதுங்கிக் கொண்டார். அண்ணன், தம்பிகளை வேறு தொழில்களுக்கு அனுப்பி வைத்தார். என்னை மதுரையில் திருமணம் செய்து கொடுத்து விட்டார். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால் எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. புகுந்த வீட்டில் கணவர், குழந்தைகள் என்று குடும்ப வேலைகளே எனக்கு சரியாக இருந்தது.

kichilli amba rice

பிள்ளைகளை படிக்க வைத்து திருமனம் செய்து கொடுத்த பின்னர் அதிக நேரம் கிடைத்தது. சும்மா இருப்பதற்கு பதிலாக இயற்கை வியவசாயம் செய்யலாம் என்று ஆசை வந்தது. அதிலும் பாரம்பரிய நெல் பயிர்களை பயிரிட விரும்பினேன். வீட்டில் போராடி பின்னர் 2013 1/2 ஏக்கரில் நெல் பயிரிட அனுமதித்தனர். அந்த நிலத்தில் சோனா பொன்னி பயிரிட ஆரம்பித்தேன் எனக்கோ அனுபவம் இல்லை. நமக்காவது சாப்பிட அரிசி கிடைத்தால் போதும் என்று லாபத்தை பார்க்காமல் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.

வீட்டிலே மாடுகளை வளர்த்து நிலத்தை உழுதேன், மாட்டு சாணத்தைப் உரமாக போட்டேன். ஒரு ஏக்கருக்கு 100 கிலோ மண் புழு உரம். 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு போட்டேன்.

ஆரம்பத்தில் நிறைய பூச்சித் தொல்லை, நோய்கள் வந்தது. "நடைமுறைக்கு ஒத்து வராது, மருந்து போடுங்கள்" என்று கூறினார்கள் வேலை பார்த்த தொழிலாளர்கள். நான் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. சாணம், கோமியத்துடன் பாசிப்பயிறு மாவு, வெல்லம் கலந்து நேரடியாக கரைத்து ஊற்றினேன். தண்ணீர் பாய்ச்சும்போது வாமடையில் வைத்தும் விட்டேன். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலும் போட்டேன். சில பூச்சி விரட்டிகளை அடித்தேன்.

sona ponni rice

அதன் பிறகு எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒன்றரை ஏக்கரில் 26  மூட்டைகளை அறுவடை செய்தேன். எதுவுமே தெரியாமல் ஆரம்பித்த போதே இந்த அளவிற்கு மகசூல் கிடைத்ததால் நம்பிக்கை ஏற்பட்டது.

முதல் முறை பயிரிட்டதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு அடுத்தடுத்த முறை கருப்பு கவுணி, துளசி சீரக சம்பா, கிச்சிலி சம்பா, வாடம் சம்பா, உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட ஆரம்பித்தேன். இந்த நெல் ரகங்கள் 150, 130, 120, 110 நாட்களில் விளைச்சலுக்கு வரக்கூடியது. எல்லாவற்றையும் ஒற்றை நாற்று முறையில் பயிரிட்டேன்.

கடந்த ஆண்டு கிச்சிலி சம்பா பயிரிட்டு 2 ஏக்கரில் 65 மூட்டைகள் எடுத்தேன். முன்பின் அனுபவம் இல்லாத என்னாலேயே இதை செய்ய முடிகிறது, என்றால் மற்ற விவசாயிகள் கையில் எடுத்தால் பாரம்பரிய நெல் விவசாயத்தில் நிறைய சாதிக்கலாம்.

தற்போது 9  ஏக்கரில் கிச்சிலி சம்பாவும், குழி வெடிச்சான் நெல் ரகங்களையும் சாகுபடி செய்துள்ளேன்" என்றார் புவனேஷ்வரி.     

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Bhuvaneshwari a family head succeeded in traditional rice farming

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.